குன்னூர், மார்ச் 11 : விளையாட்டு போட்டிகளில் சாதிக்க துடிக்கும் குன்னூரை சேர்ந்த மாணவி, மாநில அளவில் சாதனையாளர் விருது பெற்று நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஓட்டபட்டரை பகுதியை சேர்ந்த சுரேஷ் – பத்மாவதி தம்பதியினரின் மகள் தீபிகா(23). இவர் சிறு வயதில் இருந்தே பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் கொண்டவர். குன்னூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியிலும், தனியார் கல்லூரியிலும் பயின்ற தீபிகா, படிக்கும் காலத்தில் இருந்தே கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, கூடைபந்து, கபடி உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் தான் பயின்ற பள்ளிக்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
போட்டிகளில் சிறந்து விளங்கிய இவரை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 9ம் தேதி கோவையில் நடைபெற்ற 2025ம் ஆண்டிற்கான தேசத்தின் அடையாளம் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், ‘மாநில அளவிலான சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. கண்ணீர் மல்க விருதை பெற்றுக்கொண்ட தீபிகா, “உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று, இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்து தருவதுடன், தங்க பதக்கங்களை வாங்குவதற்கும் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக” தெரிவித்தார்.
The post குன்னூர் மாணவிக்கு சாதனையாளர் விருது appeared first on Dinakaran.