குண்டு வெடிப்பு நடத்த சதி: 2 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஐதராபாத்தில் அதிரடி கைது

2 hours ago 2

திருமலை: ஐதராபாத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்து பலரை கொல்ல திட்டமிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கர வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சவுதிஅரேபியாவில் இருந்து வரும் உத்தரவுக்காக காத்திருந்தது அம்பலமாகியுள்ளது. காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியா, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அவற்றின் தளங்கள் மீது கடுமையான தாக்குதலை ராணுவம் நடத்தியது. இதில் அந்நாடு கடும் அதிர்ச்சி அடைந்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கிடையே 4 நாட்கள் போர் நடந்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவே பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவில் ‘ஸ்லீப்பர் செல்கள்’ இருக்கலாம். அவர்களால் ஆபத்து ஏற்படலாம் என்பதால் மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்கும்படி ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து எச்சரிக்கையாக செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளது.

அதன்பேரில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள முக்கிய இடங்களில் அம்மாநில போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ஐதராபாத்தில் போலீசார் தங்களது சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். பஸ், ரயில், விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஐதராபாத்தில் சந்தேகமளிக்கும் வகையில் 2 வாலிபர்கள் தொடர்ந்து நடமாடியுள்ளனர். இதையறிந்த போலீசார், அவர்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர். மேலும் அவர்களது செல்போன் உரையாடல்களையும் கண்காணித்தனர். இதையடுத்து சந்தேகத்தின்பேரில் நேற்று அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் விஜயநகரத்தை சேர்ந்த சிராஜ் (33), சமீர் (33) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், பிடிபட்ட 2 பேரும் ஐதராபாத்தில் மக்கள் நடமாட்டம், வர்த்தக நிறுவனங்கள் உள்ள முக்கிய இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்தி பலரை கொல்ல திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக இவர்கள் விஜயநகரத்தில் வெடிபொருட்கள் வாங்கியுள்ளனர். இவர்களுக்கு சவுதி அரேபியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இருந்து குண்டுவெடிப்புக்கான உத்தரவுகள் வழங்கியிருப்பதும் கண்டறியப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஏராளமான வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பஹல்காம் தீவிரவாதிகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? இதற்கு முன் ஏதாவது அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா? இவர்கள் எந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என போலீசார் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். ஐதராபாத்தில் வெடிகுண்டு வைத்து பலரை கொல்ல 2 தீவிரவாதிகள் திட்டமிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post குண்டு வெடிப்பு நடத்த சதி: 2 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஐதராபாத்தில் அதிரடி கைது appeared first on Dinakaran.

Read Entire Article