தென் மேற்கு சீனாவின் குய்சோ மாகாணத்தில் வசித்த டு ஹுஷென் (Du Huzhen) என்ற 103 வயதான மூதாட்டி, தனது கணவர் ஹுவாங் ஜுன்ஃபுவின் (Huang Junfu) வருகைக்காக 80 ஆண்டு களாகக் காத்திருந்து கடந்த 2025 மார்ச் 8 அன்று மரணமடைந்தார். அவரது வாழ்க்கை, உண்மையான காதலின் சின்னமாகவும், நம்பிக்கையின் அடையாளமாகவும் தற்போது இணையம் முழுக்க டிரெண்டிங்கில் பகிரப்பட்டு வருகிறது. 1940ஆம் ஆண்டு, டு ஹுஷென் மற்றும் ஹுவாங் ஜுன்ஃபு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, ஹுவாங் ஜுன்ஃபு குவோமிங்டாங் ராணுவத்தில் சேர்ந்து போருக்கு சென்றார். 1943ஆம் ஆண்டு, டு ஹுஷென் அவரை தேடி சென்று, சில காலம் அவருடன் இருந்தார். அப்போது கர்ப்பமாகியதால், வீட்டிற்குத் திரும்பினார். 1944ஆம் ஆண்டு, ஹுவாங் ஜுன்ஃபு தாயின் இறுதிச்சடங்கிற்காக வீட்டிற்கு வந்தார். அதன்பின் மீண்டும் ராணுவப் பணிக்காக சென்றார்; ஆனால், மீண்டும் திரும்பி வரவில்லை. கணவரிடமிருந்து 1952ஆம் ஆண்டு வரை கடிதங்கள் வந்திருக்கின்றன. அதன் பிறகு எந்தத் தொடர்பும் இல்லை தனது கணவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில், டு ஹுஷென் இரண்டாவது திருமணத்திற்கு மறுத்தார். பகலில் விவசாய வேலை செய்து, இரவில் நெசவு மற்றும் காலணிகள் தயாரித்து, தனது மகனை வளர்த்திருக்கிறார். அவர் மகன் ஹுவாங் ஃபச்சாங், 1970களில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி 2022ஆம் ஆண்டு அவர் மரணமடைந்தார்.
மகன் மரணத்திற்கு பிறகு மேலும் தளர்ந்த டு ஹுஷென் தனது 103 வயதில் மரணம் அடைந்திருக்கிறார். மரணத்திற்கு முன், டு ஹுஷென் தனது திருமணத்தின் போது பயன்படுத்திய ஒரு பழைய தலையணை உறையை கையில் வைத்திருந்ததாகவும், அவர் அமைதியாக இறந்ததாகவும், டுஹுஷென் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். கணவருடன் மீண்டும் சந்திக்கும் காட்சி மனதில் தோன்றியதாகக் கூறி கடைசி நிமிடங்களில் மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார் டு ஹுஷென்.அவரது குடும்பம், டு ஹுஷென் கணவரின் தகவல்களை தேட பல முயற்சிகள் செய்திருக்கின்றனர். ஆனால், அவர் 1950களில் மலேசியாவிலும் பின்னர் சிங்கப்பூரிலும் வாழ்ந்ததைத் தவிர வேறு எவ்வித தகவல்களும் இல்லை. டு ஹுஷென் வாழ்க்கை, உண்மையான காதல், நம்பிக்கை மற்றும் தியாகத்தின் சின்னமாக மாறியிருக்கிறது. 1950களுக்குப் பிறகு பல வருடங்கள் அவரின் கணவர் பல நாடுகளில் வாழ்ந்ததற்கான தடயங்களுடன் கிடைத்தாலும் டு ஹுஷென்னின் நம்பிக்கையை உடைக்காமல் குடும்பத்தார் டு ஹுஷென்னிடம் தெரிவிக்கவில்லையாம்.
The post 80 வருடங்கள் காத்திருந்த ஒரு பெண்ணின் காதல்! appeared first on Dinakaran.