தலைப்பகுதியில் உள்ள தோலின் கெராட்டின் என்ற புரோட்டினால் முடி வளர்கிறது. நாம் தலைக்கு வெளியே பார்க்கும் முடிக்கு ஜீவன் கிடையாது. ஆனால் சருமத்தின் உள்ளே இருக்கும் பகுதிக்கு உயிர் உண்டு. வளர்ச்சியும் உண்டு. அவைகளில் தான் அதீத கவனம் தேவை. தோலில் உள்ள ரத்தக் குழாய் களில் இருந்து கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றன. ஆகவே கூந்தல் வளர வேண்டும் என்றால் தலையின் கபால ஓட்டுக்கு முறையாக ரத்த ஓட்டம் தேவை. அதற்கு உடலுக்குத் தேவையான உணவு அவசியம்.பெண்களின் கூந்தலை 3 விதமாகப் பிரிக்கலாம். அவை வறண்ட கூந்தல், எண்ணெய் தன்மை நிறைந்த கூந்தல், சராசரி தன்மை கொண்ட கூந்தல்.வறண்ட கூந்தலை உடையவர்களுக்கு எப்போதும் முடி காய்ந்து வறண்டு போயிருக்கும். இந்த கூந்தலை சீவி முடிப்பது சிரமமான விஷயம். இவர்கள் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சூடாக்கி முடிகளின் வேர்களில் தடவி விரல் நுணிகளால் 20 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் ரத்த ஓட்டம் அதிகமாகும்.
எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடும் துரிதப்படும். தினமும் அரை மணி நேரம் தலைமுடியை சீப்பால் வாருவது நல்லது. வாரத்தில் ஒரு நாள் ஷாம்பு பயன்படுத்தவும். ஷாம்புக்கு பதிலாக பாசிப்பயறு மாவு அல்லது சீயக்காய்தூள் பயன்படுத்தலாம்.எண்ணெய்த் தன்மை நிறைந்த கூந்தலை உடையவர்களுக்கு அழுக்கும், தூசும் முடியில் நிறைந்திருக்கும். இவர்கள் சரியாக கூந்தலை பராமரிக்காவிட்டால் சீக்கிரமே முடி உதிரத் துவங்கி விடும். இவர்கள் வாரம் மூன்று முறை தலைக்குக் குளித்து கூந்தலை பராமரிப்பது அவசியம். சில நாட்டு மருந்து கடைகளில் ஹெர்பல் ஹேர் டானிக், அல்லது ஹெர்பல் ஸ்ப்ரே விற்கும். அவற்றைப் பயன்படுத்தலாம். இவர்கள் தினமும் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக நேரம் கூந்தலை சீவக்கூடாது.
சராசரி தன்மை கொண்ட கூந்தலை உடையவர்கள் கூந்தலில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை தலையில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்யவும். 10 நாட்களுக்கு ஒரு முறை செம்பருத்தி இலை, அரப்புத்தூள் அல்லது பாசிப்பயிறு ஆகியவற்றை பயன்படுத்தி தலைக்குக் குளிக்கலாம். இவர்கள் அதிகமாக வெயிலில் நடமாடக் கூடாது. கோடைகாலம் என்பதால் கூடுமானவரை காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை நேரடியாக வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும். ஒருவேளை அவசியம் எனில் தலையை சுத்தமான துணி கொண்டு கவர் செய்துக் கொள்ளலாம்.
– கவிதாபாலாஜி கணேஷ்.
The post கேஷத்தைக் கேர் செய்யுங்க! appeared first on Dinakaran.