அம்பிகையின், ஆணைகளை சிரமேற்கொண்டு செய்பவர்கள்தான் யோகினிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் எண்ணிக்கையில் பல்லாயிரம் கோடிகள் இருப்பார்கள். ஆனால் இந்த பல்லாயிரம் கோடி யோகினிகளில் முக்கியமானவர்களாக கருதப் படுபவர்கள் அறுபத்துநான்கு பேர்கள்.“கடாக்ஷ கிங்கரி பூத கமலா கோடி சேவிதா’’ என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு நாமம் இடம் பெறுகிறது. இது, அம்பிகையின் கிருபைக்கு பாத்திரமாவதற்காக, அம்பிகை இடும் ஆணைகளை சிர மேல் கொண்டு செய்து முடிக்க காத்திருக்கும் பல்லாயிரக் கணக்கான யோகினிகளால் அம்பிகை எப்போதும் சேவிக்கப் படுகிறாள் என்று சொல்கிறது.
இந்த நாமம், யோகினிகள் எண்ணில் அடங்காத கணக்கில் இருக்கிறார்கள் என்று நமக்கு காட்டிக் கொடுக்கிறது. அதே போல, கணக்கில் அடங்காத இந்த யோகினிகளை, அறுபத்தி நான்கு கோடி பேர்கள் என்று கணக்கிடும் ஒரு வழக்கமும் உண்டு. இதற்கு ஆதாரமாக “சதுஷ் ஷஷ்டி கோடி யோகினி கன சேவிதா’’ என்ற நாமம் இருக்கிறது.
இந்த அறுபத்து நான்கு கோடி யோகினிகளுக்கு, ஒரு கோடிக்கு ஒருவர் என, அறுபத்து நான்கு பேர்கள் தலைவிகளாக இருக்கிறார்கள். ஆகவே, முக்கியமான யோகினிகளை கணக்கிடும் போது அவர்களை அறுபத்துநான்கு பேர்கள் என்று சொல்லும் வழக்கமும் உண்டு.இப்படி முக்கியமான யோகினிகள் அறுபத்தி நான்கு பேர்களில், மிகவும் சக்தி வாய்ந்த ஒரு யோகினிதான், சௌத்திராஹர யோகினி. இந்த யோகினியை பற்றி காண்போம் வாருங்கள்.
* பூனை முகமும் காரணமும்
இந்த சௌத்திராஹர யோகினி, பூனை முகம்கொண்டவளாக இருப்பதாக சாஸ்திரங்கள் சொல்கிறது. அதற்கு பின்னே ஒரு ஆழ்ந்த காரணமும் இருக்கிறது. முக்கியமான யோகினிகள் அறுபத்தி நான்கு பேர்களில், பலர் விலங்கு முகம் கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். யோகினிகள் நினைத்த உருவத்தை எடுக்கும் திறமை பெற்றவர்கள். இதை உணர்த்தவே இவர்கள் விலங்கின் முகத்தோடு சித்தரிக்கப் படுவதாக சிலர் கருதுகிறார்கள். அதே சமயம், கெட்ட சக்திகளிடமிருந்தும், மந்திர உபாசனை செய்து, தங்களை கட்டுப்படுத்தி கீழான வேலைகளில் ஈடுபடுத்தும் துர் மந்திரவாதிகளிடமிருந்தும், தப்பிக்கவே யோகினிகள், மிருக மற்றும் பறவையின் முகத்தை விரும்பி ஏற்கிறார்கள்.
இவர்களின் அளப்பரிய ஆற்றலை கண்டு, இவர்களை வெறும் உலகாயத விஷயங்களுக்காக உபாசனை செய்பவர்களிடமிருந்து தப்பவே இப்படி ஒரு ரூபம் தரித்து இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.இந்த யோகினிகள் தங்களின் அதீத ஆற்றலின் காரணமாக, புறா அன்னம், கோழி, ஆந்தை, நரி, தேனீ, வண்டு, பசு, எருது, பூனை, பெண்புலி ஆகிவற்றின் வடிவை தாங்கிக் கொண்டு, தங்கள் வருகையை யாரும் புரிந்து கொள்ளாத படி மறைத்து விடுவார்கள். மேலும், இது போன்ற வடிவங்களை கொண்டு, மற்ற வர்களை மயக்கி தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்வார்கள் இவர்கள் என்று “கௌலஞான நிர்ணயா’’ என்ற நூல் சொல்கிறது.
குண்டலினியும் சௌத்திராஹர யோகினியும் யோக சாதனை செய்யும் யோகியின் உடலில், தெய்வீக ஆற்றல் பாய்ந்து, அது நாடி நரம்புகளின் வழியே உடலெங்கும் பரவும். அப்போது வேறு சில, உலகாய ஆசைகள் தோன்றினால், நாடிகளில் முடிச்சி ஏற்படுவது இயல்பு. உதாரணமாக, நான், என்னுடைய எனது, போன்ற ஆணவ எண்ணம் தோன்றினால், யோகத்தில் முன்னேற்றம் அடைவது தடைப்படும். இவை முடிச்சுகளாக நரம்புகளில் விழுந்து, குண்டலினி எழுவதை தடுக்கும்.
அப்போது மேற்கொண்டு குண்டலினி சக்தி, முன்னேறி செல்லாமல், இருந்த இடத்திலேயே சுருண்டு விடும். இந்த முடிச்சுகளை அவிழ்த்தால் ஒழிய, யோகியால் முன்னேற முடியாது. இதுபோன்ற ஆணவ முடிச்சுகளை, முரட்டுத் தனமான எண்ணங்களை நீக்குபவள் இந்த யோகினி.
உதாரணமாக, இலங்கை வேந்தன் ராவணன், ஆணவச் செருக்கால் புஷ்பக விமானத்தில் சுற்றித் திரிந்தான். அப்போது கைலாய மலை எதிர்பட்டது. பரமன் வசிக்கும் கைலாய மலைக்கு மேல் பறக்க முடியாமல், புஷ்பக விமானம் நின்றுவிட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராவணன், கைலாய பர்வத்தையே பெயர்த்து வேறு ஒரு இடத்தில் வைக்க முற்பட்டான்.
கைலாய மலையை தனது இருபது கைகளாலும் தூக்கினான். நடப்பதை அறிந்த ஈசன், கையிலை மலையில் தனது கால் கட்டை விரலை ஊன்றினார். அந்த அளவில் ராவணனின் கைகள் அத்தனையும் மலைக்கு கீழே மாட்டிக்கொண்டது. பாரம் தாங்காமல் துடிதுடித்தான். கதவு இடுக்கில் மாட்டிக் கொண்ட எலியை போல தவித்தான். இது போன்ற நிலை நமக்கும், வாழ்க்கையில் ஏற்பட வாய்ப்புண்டு. நமது ஆணவம் போன்ற தீயகுணங்களால் நாம், பெரும் இன்னலுக்கு ஆளாக நேரலாம். இப்படிப்பட்ட நிலையில் இருந்து நம்மை காப்பாற்றுபவள்தான் சௌத்திராஹர யோகினி.
சௌத்திராஹர யோகினியின் தோற்றம்
இந்த யோகினி, பூனை முகம் கொண்ட வளாக, வலது கரத்தில் காலியான ஒரு கிண்ணத்தை பிடித்துக்கொண்டு இருக்கிறாள். மற்றொரு கையால் எலியை வாயில் வைத்து புசிக்கிறாள். மனம், தீய எண்ணங்கள் இல்லாமல், ஆணவம் இல்லாமல் காலியாக இருந்தால்தான் இறைவனை உணர முடியும். ஆன்மிகத்தில் உயர முடியும். அந்த சுத்தமான மனதை, அமைதியான மனதை, உபாசகனுக்கு தருபவள் சௌத்திராஹர யோகினி என்பதை காட்டவே கையில் காலியான கின்னங்களை வைத்து இருக்கிறாள்.
அதே போல உபாசகன், ஆன்மிகத்தில் உயரும் போது அவனுக்கு பல விதமான தடங்கல்கள் ஏற்படலாம். எப்படி ஒரு சிறு எலி பெரிய தானியக் கிடங்கையே நாஸ்தி செய்யுமோ, அதே போல ஒரு சிறிய தடங்கல் ஒட்டு மொத்த ஆன்மிக முன்னேற்றத்தையே முறியடிக்கும். அப்படிப்பட்ட தடங்கல்களை நசிப்பவள் இந்த சௌத்திராஹர யோகினி என்பதை காட்டவே இவள் எலியை புசிப்பது போல சித்தரிக்கப் படுகிறாள்.
சஷ்டி தேவி பிரகிருதியின் ஆறாவது அம்சமாக கருதப்படுபவள் சஷ்டிதேவி. ஆதி சக்தியின் ஒரு வடிவமாக இந்த தேவி வழிபடப்படுகிறாள். வட இந்தியாவில் இவளது வழிபாடு பிரசித்தி பெற்றது. பெரும் சக்தி வாய்ந்தவள் இந்த தேவி. மனிதர்களில் முதல் மனிதனான மனுவின், குமாரன், பிரியவிரதனுக்கும் அவனது மனைவி மாலினிக்கும், காசியபர் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் பலனாக ஒரு குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த குழந்தைக்கு உயிர் இல்லை. தவமாய்த் தவமிருந்து பெற்ற மகன், உயிரற்றுப் பிறந்ததை எண்ணி, பிரியவிரதன் துடி துடித்தான். அப்போது ஆகாயம் வழியே வந்த இந்த சஷ்டிதேவி, இறந்த குழந்தையை உயிர்ப்பித்துத் தந்தாள்.
இவள் குழந்தைகளை பேணி பாதுகாப் பதில் வல்லவள். அடியவர்களுக்கு புத்திர பாக்கியம் அருள்வதில் பெயர் பெற்றவள். ஒப்பில்லா இந்த தேவி, கருப்புப்பூனையையே தனது வாகனமாக கொண்டுள்ளாள். சஷ்டி தேவி என்ற வடிவில் அம்பிகைக்கு வாகனமாக இருக்கும் பேறு பெற்றது கருப்புப் பூனை. அதை போலவே சௌத்திராஹர யோகினியும் பூனை முகம் கொண்டு காட்சி தருகிறாள்.
சௌத்திராஹர யோகினியை எங்கே தரிசிப்பது
ஒரு காலத்தில் யோகினிகள் வழிபாடு பாரதத்தில் புகழ் பெற்று இருந்தது. ஆனால், காலப்போக்கில் அவை மறைந்துவிட்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இருப்பினும், முன்னம் இருந்த யோகினி வழிபாட்டின் மிச்சமாக இன்னமும் மத்திய பிரதேசத்தில் ஒரு அறுபத்து நான்கு யோகினிகளின் கோயில் இருக்கிறது. அந்நியர்களின் படையெடுப்பால், ஒரு காலத்தில் அழகாக இருந்த இந்த கோயிலும், அதில் இருந்த யோகினிகளின் சிலைகளும் சிதைக்கப் பட்டுவிட்டது. இருப்பினும் அதனுடைய மிச்சமாக கோயில் இன்னமும் இருக்கிறது. இந்த கோயிலில் சென்று சௌத்திராஹர யோகினியின் திரு உருவைத் தரிசிக்கலாம்.
சௌத்திராஹர யோகினியை எப்படி வணங்குவது
யோகினிகளை வழிபடும் முறையை, கிரமமாக ஒரு குரு மூலமாக கேட்டு அறிந்து கொண்டு, அதன்படி பூஜிப்பதே முறை. தான்தோன்றித் தனமாக வழிபடுவது ஆபத்தில் முடியலாம். இருப்பினும் யோகினிகளின் அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், உளமார அந்த பராசக்தியை வணங்கி வழிபட்டால் போதும்,
அம்பிகையின் ஏவலர்களான யோகினி
களின் அருள், அம்பிகையின் அருள்
இருந்தால், தானாக அனைத்தும் வந்து சேரும்.
ஜி.மகேஷ்
The post குண்டலினி சக்தியை எழுப்பும் சௌத்திராஹர யோகினி appeared first on Dinakaran.