
சென்னை,
அஜித் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கும் இப்படம் கடந்த 10-ம் தேதி வெளியானது. இதில், திரிஷா அர்ஜுன் தாஸ், ஜாக்கி ஷெராப் மற்றும் ராகுல் தேவ் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தில் அஜித்தின் மகனாக கார்த்திகேயா நடித்திருந்தார். இவர் 2023-ம் ஆண்டு வெளியான சாலரில் இளம் பிருத்விராஜாக நடித்திருந்தார்.
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் மகனாக நடிக்க தன்னை இயக்குனர் ஆதிக் அணுகியதாகவும் ஆனால், அதில் நடிக்க முடியாமல் போனதாகவும் ‛பிரேமலு' படத்தில் கதாநாயகனாக நடித்த நஸ்லேன் கூறி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ' 'குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் மகனாக நடிக்க இயக்குனர் ஆதிக் என்னை அணுகி இருந்தார். அப்படம் இரண்டு ஷெட்யூலாக அதிக நாட்கள் எடுக்கப்பட இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் நான் 'ஆலப்புழா ஜிம்கானா' படத்தில் நடித்து வந்தேன். இதனால், குட் பேட் அக்லி-க்கு தேதி ஒதுக்க முடியாமல் போய்விட்டது' என்றார்.