இறந்த தந்தையின் உடலுக்கு முன்பு காதலியை திருமணம் செய்து கொண்ட வாலிபர்

1 day ago 4

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த கவணை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (63 வயது). ரெயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் அப்பு (32 வயது). இவரும் விருத்தாசலம் அடுத்த அரசக்குழி கிராமத்தைச் சேர்ந்த விஜயசாந்தியும் (23 வயது) கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் செல்வராஜ் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது திடீரென அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது.

அப்போது அப்பு எனது தந்தையின் ஆசியுடன்தான் திருமணம் நடக்க வேண்டும் எனக் கூறி அவரது காதலியான விஜயசாந்தியை வரவைத்து தனது தந்தை உடலின் முன்பு நின்று தனது தாய் கண்ணம்மாள், தந்தை செல்வராஜிக்கு பாத பூசை உள்ளிட்ட திருமண சடங்குகளை செய்து அவரது தந்தையின் கையால் தாலி எடுத்து கொடுக்க சொல்லி அந்த தாலியை வாங்கி தனது காதலி விஜயசாந்திக்கு கட்டி திருமணம் செய்து கொண்டார். மேலும் இருவரும் தாய், தந்தையின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

அப்போது அவரது தாயார் தூக்கம் தாங்க முடியாமல் அழுதபடியே அவர்களை வாழ்த்தினார். செல்வராஜின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறவினர்கள், நண்பர்கள் பலரும் துக்கத்திலும் கண்ணீர் மல்க அப்பு, விஜயசாந்தியை வாழ்த்தினார்கள்.

Read Entire Article