
சென்னை,
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய திடீர் சோதனை நடத்திய சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜேசேகர் ஆகியோர் முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது அமலாக்கத் துறை தரப்பில், "டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனையின் போது பெண் அதிகாரிகள் யாரும் இரவில் தங்கவைக்கப்படவில்லை. ஒருசில ஆண் அதிகாரிகள் மட்டுமே மூன்று நாட்களும் தங்க வைக்கப்பட்டனர். நள்ளிரவில் பெண் அதிகாரிகள் யாரும் வீட்டுக்கு அனுப்பப்படவில்லை. பாதுகாப்பு கருதி அவர்கள் முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதிகாரிகளுக்கோ, அலுவலக உடைமைகளுக்கோ எந்த சேதமும் ஏற்படுத்தவில்லை . சோதனை மேற்கொண்டபோது அமலாக்கத் துறை பெண் அதிகாரிகள் இருந்தனர். சோதனையின் போது அதிகாரிகள் யாரும் துன்புறுத்தப்படவில்லை. அவ்வாறு துன்புறுத்தப்பட்டதாக பொய்யான தகவல்களை கூறி வழக்கை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள்.
எதற்காக சோதனை என டாஸ்மாக் தலைவர், மேலாளருக்கு தெரியப்படுத்திய பிறகே சோதனை நடைபெற்றது. அனைவருக்கும் உணவு மற்றும் போதிய ஓய்வு அளிக்கப்பட்டது. சோதனையின் போது யாருடைய அந்தரங்க உரிமையும் பாதிக்கப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டது.
அமலாக்கத் துறை வாதங்கள் முடிந்த நிலையில் டாஸ்மாக் தரப்பு பதில் வாதம் வைக்க உள்ளது. இதனையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.