
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் மசினகுடி ஊராட்சி, முதுமலை புலிகள் காப்பகத்தின் கரையோரம் உள்ளது. அங்குள்ள சிங்காரா நீர் மின் நிலைய பகுதியில் காட்டு யானைகள் உள்ளன. இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, சிங்காரா குடியிருப்பு பகுதியில் நுழைந்தது.
இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். அதிகாலை 3 மணிக்கு சத்தம் கேட்டு பொதுமக்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் முன்பு புல் மைதானத்தில் காட்டு யானை படுத்து தூங்கி கொண்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். மேலும் மனிதர்களை போல் படுத்து தூங்கி கொண்டிருந்த காட்டு யானையை விரட்ட மனம் இல்லாமல் அப்பகுதி மக்கள் இருந்தனர்.
காட்டுக்குள் தூங்குவது போர் அடித்து விட்டது என்பது போல பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் யானை நீண்ட நேரமாக தூங்கி கொண்டிருந்தது. பின்னர் அதிகாலை 5 மணிக்கு தூக்கத்தில் இருந்து விழித்து மெதுவாக எழுந்தது. தொடர்ந்து உடல் சோம்பலை முறித்தபடி வனப்பகுதிக்குள் காட்டு யானை நடந்து சென்றது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.