லக்னோ : தமிழக அரசு தொடர்ந்த வழக்கு ஒன்றில், சட்டமன்றங்கள் நிறைவேற்றிய மசோதாவை பரிசீலிக்க ஆளுநருக்கு கெடு விதித்த உச்சநீதிமன்றம், ஜனாதிபதியும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க 3 மாதம் கெடு என தீர்ப்பளித்தது. இதே போல், அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கும் இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு மற்றும் வக்ஃபு வழக்கில் உச்சநீதிமன்றம் எடுத்த நிலைப்பாடு குறித்தும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலின் புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் நேற்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்திய அரசியலமைப்பின் அமைப்புகள் அதன் அதிகார வரம்பை மீறாமல், பிற அமைப்புகளை மதித்து நடப்பது நமது கடமை. மோதல் போக்கு ஏற்பட்டால் ஜனநாயகம் தழைக்காது. மிகவும் ஆபத்தான சவால்கள் நமக்குள்ளே இருந்தே எழுபவைதான், இதனை நாம் வெளிப்படையாக பேசவும் முடியாது. குடியரசுத் தலைவர் போன்ற கன்னியமிக்க பதவி குறித்து கருத்து சொல்வதெல்லாம், ஆழ்ந்த சிந்தனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயம். அரசியலமைப்பின் படி குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகிய இரு பதவிகள் உச்சபட்ச அதிகாரம் கொண்டவை,”இவ்வாறு குறிப்பிட்டார்.
The post குடியரசுத் தலைவர், ஆளுநர் பதவிகள் உச்சபட்ச அதிகாரம் கொண்டவை : உச்சநீதிமன்றத்தை மீண்டும் சீண்டிய குடியரசு துணைத் தலைவர்!! appeared first on Dinakaran.