நமது முன்னோர்கள் பயிரிட்டு பயன்படுத்தி வந்த பாரம்பரிய நெல் ரகங்கள், இப்போது மீண்டும் மறு உருவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. நெல் ஜெயராமன் போன்றோர் நமது பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு, பயிர் செய்து, பரவலாக்கம் செய்ததன் பயன் இப்போது கண்கூடாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஆரம்பத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக பயரிடப்பட்ட இந்த ரகங்கள் இப்போது பரவலாக பல இடங்களில் பயிரிடப்படுகின்றன. பயிரிடப்படுவதோடு, நெல் திருவிழா, உணவுத்திருவிழா என பல விழாக்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக பாரம்பரிய அரிசி ரகங்களுக்கு இப்போது நல்ல டிமாண்டும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பாரம்பரிய ரகங்களைப் பயிரிடும் விவசாயிகள் ஊக்கம் பெற்று, சாகுபடி பரப்பை அதிகரித்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த3 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு, அவற்றை அரிசியாக்கி லாபம் பார்த்துவருகிறார் ராணிப்பேட்டை மாவட்டம் கலவைப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அரங்கநாதன். ஐடிஐ படித்துவிட்டு கலவை பேரூராட்சியில் குடிநீர் பம்ப் ஆபரேட்டராக பணியாற்றி வரும் இவர் விவசாயத்தையும் ஆர்வமாக செய்து வருகிறார். குடிநீர் பம்ப் இயக்கம், விவசாயம் என எப்போதும் பிசியாக ஓடிக்கொண்டிருக்கும் அரங்கநாதனை ஒரு காலைப்பொழுதில் சந்தித்தோம். நம்மை வரவேற்றுப் பேசினார்.
“ நான் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்கானிக் உணவுகள் குறித்து கேள்விப்பட்டு, இயற்கை முறையில் விளைந்த அரிசியை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்தேன். உணவு சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தது. இதனால் நாமே ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்தால் என்ன? என தோன்றியது. உடனே எனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் 1 ஏக்கரில் ஆர்கானிக் விவசாயம் செய்து வருகிறேன். அதில் பாகம், பாகமாக பிரித்து நெல், காய்கறி என பயிரிட்டு வருகிறேன். நெல் ரகங்களில் வாசனை சீரகச்சம்பா, கருப்புக்கவுனி, ஆத்தூர் கிச்சலி சம்பா, ஆற்காடு கிச்சலி சம்பா உள்ளிட்ட ரகங்களைச் சாகுபடி செய்கிறேன். இப்போது 40 சென்ட் நிலத்தில் இலுப்பைப்பூ சம்பா நெல் பயிரிட்டு இருக்கிறேன். இலுப்பைப்பூ சம்பா நெல்லை வரிசை நடவாகவும் நடலாம். சாதாரண முறையிலும் நடலாம். இதை மானாவாரி பயிர்போல புழுதி ஓட்டியும் விதைக்கலாம். நான் நாற்றங்கால் அமைத்து நாற்று பாவி நடவு செய்தேன்’’ என தனது இயற்கை விவசாய வரலாறு குறித்து கூறியஅரங்கநாதனிடம் இலுப்பைப்பூ சம்பா சாகுபடி முறைகள் குறித்துக்கேட்டோம்.
முதலில் கரம்பாக கிடந்த நிலத்தில் சாண எருவைக் கொட்டி நன்றாக3 முறை உழவு ஓட்டினோம். பின்பு நாற்றங்காலில் விதைத்த நாற்றுகளைப் பிடுங்கி கயிறு கட்டி வரிசை முறையில் நடவு செய்தோம். நாற்றுகளை முக்கால் அடி இடைவெளியில் ஒற்றை நாற்று முறையில்தான் நட்டோம். பெரிய அளவுக்கு பாசனம் எல்லாம் செய்யவில்லை. மழைநீரே அதற்கு போதுமானதாக இருந்தது. ஒற்றை நாற்று முறையில் நட்டதால் ஒரு நெல்லில் இருந்து 30 தூர்கள் வரை வந்தது. 22வது நாளில் கோனோவீடர் மூலம் களை எடுத்தோம்.விதைத்த 3வது மாதத்தில் பயிர்களில் கதிர் பிடிக்க ஆரம்பிக்கும். ஒவ்வொரு கதிரிலும் சுமார் 50 முதல் 70 ெநல்மணிகள் வரை இருக்கும். இலுப்பைப்பூ சம்பா நெற்பயிரின் தண்டுப்பகுதி பருமனாக இருக்கும். இதன் சோகைகள் மிக நீளமாக இருக்கும். இதனால் பூச்சிகளின் தாக்குதல் குறைவாகவே இருக்கும். ஒருமுறை பூச்சி தாக்குதல் இருந்தது. புளிச்ச மோரை தெளித்து பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்தினோம். நடவு செய்த 120வது நாளில் அறுவடைப்பணியை மேற்கொள்வோம். இந்த நெற்பயிர் பசுமையாக இருக்கும்போதே அறுவடை செய்துவிட வேண்டும். அப்போதுதான் நெல் சேதமாகாமல் முழுமையாக கிடைக்கும்.
இந்த 40 சென்ட் நிலத்தில் 6 மூட்டை வரை நெல் மகசூலாக கிடைக்கும். அந்த நெல்லை அரிசியாக்கி விற்பனை செய்கிறோம். எப்படியும் 250 கிலோ வரை அரிசி கிடைக்கும். அதை கிலோரூ.140 என விற்பனை செய்கிறோம். இதன் மூலம் 35,000 வருமானமாக கிடைக்கிறது. இதில் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை செலவு ஆகியிருக்கிறது. இதுபோக ரூ.25 ஆயிரம் லாபமாக கிடைக்கும்.3 மாதத்தில் 40 சென்ட் நிலத்தில் இந்த லாபம் நல்ல லாபம்தான்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
அரங்கநாதன்: 95432 07717.
The post குடிநீர் பம்ப் ஆபரேட்டர் இயற்கை உழவரான கதை! appeared first on Dinakaran.