சென்னை: அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்த கணவன் மீது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுத்ததால் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்த ெசன்னை உயர் நீதிமன்றம், வழக்கு பதிவு செய்த போலீசை எச்சரித்து உத்தரவிட்டுள்ளது. கடலூரை சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு மனைவியும் பெண் குழந்தையும் உள்ளனர். ராஜா தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அவரது மனைவி கடலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
புகாரில் தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்திருந்தார். இந்த வழக்கு கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இது பொய்யான புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கு. மனுதாரரும் அவரது மனைவி, மகளும் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள். போலீசார் எதையும் சரியாக விசாரிக்காமல் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். வழக்கில் இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் மனைவி மற்றும் மகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, மனுதாரரின் மனைவி மற்றும் மகள் நீதிமன்றத்தில் கடந்த 20ம் தேதி ஆஜராகினர். அப்போது, அந்த சிறுமியிடம் நீதிபதி கேட்டபோது, அப்படி எதுவும் நடக்கவில்லை.
அப்பாவும், நாங்களும் சந்தோசமாக இருக்கிறோம் என்றார். மனுதாரரின் மனைவியும் தாங்கள் சந்தோசமாக வாழ்வதாக தெரிவித்தார்.
போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் மனைவி தனது கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதாக புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் உடலில் கெரசின் ஊற்றி தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டினார். அதனால்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இது போன்று சட்டவிரோதமாக வழக்கு பதிவு செய்யக்கூடாது என்று போலீசை இந்த நீதிமன்றம் எச்சரிக்கிறது. வழக்கு பதிவு செய்வதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாத பட்சத்தில் எப்படி இதுபோன்ற வழக்கை பதிவு செய்ய முடியும். எனவே, இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
The post குடித்துவிட்டு தகராறு செய்வதாக மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கணவன் மீது தொடரப்பட்ட பொய் வழக்கு ரத்து: போலீசாருக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை appeared first on Dinakaran.