குடிக்க நீர் கேட்டு வீட்டு கதவை தட்டிய வாலிபரின் கொடூர செயல்

1 day ago 3

புனே,

மராட்டியத்தின் தானே மாவட்டத்தில் கல்யாண் நகரில் வசித்து வந்தவர் ரஞ்சனா பதேகர் (வயது 60). அவர் அம்பிவாலி பகுதியில் வீட்டில் இருந்தபோது, அக்பர் முகமது ஷேக் என்ற சந்த் (வயது 30) என்பவர் வீட்டு கதவை தட்டியுள்ளார். அந்த மூதாட்டி வந்து கதவை திறந்து என்னவென்று கேட்டுள்ளார்.

அதற்கு சந்த் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து அந்த மூதாட்டி தண்ணீர் கொண்டு வருவதற்காக வீட்டுக்குள் சென்றிருக்கிறார்.

அப்போது, அவரை பின்தொடர்ந்தபடி சந்த் சென்றுள்ளார். வீட்டில் வேறு யாரும் இல்லை என தெரிந்து கொண்டதும் தொலைக்காட்சியின் ஒலியை சந்த் அதிகரித்து வைத்துள்ளார். இதனால், வீட்டில் இருந்து சத்தம் வெளியே கேட்காத வகையில் இருந்தது. இதன்பின்னர், ரஞ்சனா பதேகரை படுகொலை செய்து விட்டு, அவரின் ரூ.1 லட்சம் மதிப்பிலான காதணிகளை திருடி விட்டு தப்பி சென்று விட்டார்.

கதக்பாத காவல் நிலையத்தில் பதிவான வழக்கு ஒன்றில் ஆதர்வதி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சந்த், 8 மாதங்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டார்.

அப்போதிருந்து வேலையில்லாமல் சுற்றி திரிந்திருக்கிறார். சாலையோரம் மோமோ விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட விரும்பியுள்ளார். இதற்கு பணம் தேவையாக இருந்துள்ளது. இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார் என காவல் துறையின் துணை ஆணையாளர் அதுல் ஜெண்டே கூறியுள்ளார்.

இந்நிலையில் அடாலி பகுதியில் வைத்து சந்த் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, திருடப்பட்ட காதணிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Read Entire Article