அகமதாபாத்: 2025 ஐபிஎல் திருவிழாவில் இதுவரை 50 போட்டிகள் முடிந்துவிட்ட நிலையில் எந்த அணியும் பிளே ஆப் சுற்றை முடிவு செய்யவில்லை. இந்நிலையில் அகமதாபாத்தில் இன்று இரவு நடக்கும் 51வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ், குஜராத் அணிகள் மோதுகின்றன. குஜராத்தை பொறுத்த வரை அந்த அணியின் சாய் சுதர்சன் 5 அரைச்சதங்களுடனும், கேப்டன் சுப்மன் கில் 4 அரைசதங்களுடனும் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர். இவர்களுடன் பட்லரும் அதிரடி காட்டுகிறார்.
பந்துவீச்சில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரஷித் கான் ஆகிய மும்மூர்த்திகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு பக்கபலமாக உள்ளனர். சன்ரைசர்ஸ் பொறுத்தவரை பேட்டிங்கில் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், கிளாசென் என அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தும் அவர்கள் கணிசமாக ரன்குவிக்க முடியாமல் தவிக்கின்றனர். இன்றைய போட்டியில் 3 பேர் அதிரடி காட்டினாலும் ஆட்டத்தின் போக்கே மாறிவிடும். பந்துவீச்சை பொறுத்தவரை பவுலிங் ஆல்ரவுண்டரான கேப்டன் கம்மின்ஸ் இன்றைய போட்டியில் விக்கெட்டுகளை கைப்பற்றினால் அணிக்கு சாதகமானதாக அமையும்.
சன்ரைசர்ஸ் அணியில் ஹர்ஷல் பட்டேல் மட்டுமே பந்துவீச்சில் கவனம் ஈர்க்கிறார். இவருடன் முகமது ஷமி கை கொடுக்கும் பட்சத்தில் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் கை ஓங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஐதராபாத்தில் இந்த இரு அணிகள் மோதிய போட்டியில் குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதற்கு பழி தீர்க்கும் முனைப்பில் சன்ரைசர்ஸ் களமிறங்குவதால் ரசிகர்களுக்கு இந்த போட்டி விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
The post குஜராத்தை பழிதீர்க்குமா சன்ரைசர்ஸ்: அகமதாபாத்தில் இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.