காந்தி நகர்,
குஜராத் மாநிலம் அம்ரெலி மாவட்டம் கோவயா கிராமத்தை சேர்ந்தவர் ரம்பை லக்னோத்ரா. இவர் அந்த கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு 12 மணியவில் லக்னோத்ராவின் வீட்டின் சமையல் அறையில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வீட்டின் சமையலறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, வீட்டின் மேற்கூரை வழியாக சமையல் அறைக்குள் சிங்கம் நுழைந்துள்ளது தெரியவந்தது. சிங்கம் சமையல் அறையில் இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறியடித்தபடி வீட்டில் இருந்து வெளியேறினர். பின்னர், கிராம மக்களும் விரைந்து சென்று வீட்டில் இருந்த சிங்கத்தை விரட்ட முயற்சித்தனர். மக்களின் சுமார் 2 மணிநேர முயற்சிக்குப்பின் சிங்கம் வீட்டில் இருந்து வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றது. வீட்டின் சமையல் அறையில் சிங்கம் இருந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.