சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரத்தின் வார்ச்சா பகுதியில் ராகுல் பிரமோத் மஹ்தோ – அஞ்சலி குமாரி ஜோடிக்கு, அப்பகுதியில் இருந்த திருமண ஹாலில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. திருமண நிகழ்ச்சிக்கு உறவினர்கள், விருந்தினர்கள் என்று நூற்றுக் கணக்கானோர் வந்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு தேவையான விருந்தை வழங்க முடியவில்லை. உணவு பற்றாக்குறை ஏற்பட்டதால் மணமகனின் குடும்பத்தினர் ரகளையில் ஈடுபட்டனர். ஒருபக்கம் திருமணத்திற்கான பெரும்பாலான சடங்குகள் முடிந்துவிட்டாலும், மணமக்கள் மாலைகள் பரிமாற்றம் மட்டுமே எஞ்சியிருந்தது.
உணவு பற்றாக்குறை விவகாரத்தால் இரு குடும்பங்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், எஞ்சியிருந்த திருமண சடங்குகள் நின்றுபோயின. மணமகனின் குடும்பத்தினரின் நடத்தையால் விரக்தியடைந்த மணமகளும், அவரது குடும்பத்தினரும் அப்பகுதி காவல் நிலையத்திற்கு தகவல்கள் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். ஆனால் அஞ்சலி குமாரியை தான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று ராகுல் பிரமோத் மஹ்தோ தெரிவித்தார். இதற்கு அவரது குடும்பத்தினரும் ஆதரவாக இருந்தனர். ஆனால் மணமகள் அஞ்சலி குமாரி, மணமகன் ராகுல் பிரமோத்தை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக கூறினார். ஒருகட்டத்தில் மணமகள் அழுதுவிட்டார்.
அவரது குடும்பத்தினர் மணமகளை சமாதானப்படுத்தினர். பின்னர் மணமகனும், அவரது குடும்பத்தினரும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அதேபோல் மணமகளும், அவரது குடும்பத்தினரும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இவ்விவகாரம் குறித்து காவல் துறை மூத்த அதிகாரி தலையிட்டு, இரு தரப்பையும் சமரசம் செய்து வைத்தார். அதன் பின்னர் மணமகன் – மணமகள் இருவரும் தாங்கள் திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டனர். இரு தரப்பு குடும்பத்தினர் முன்னிலையில் காவல் நிலையத்திலேயே திருமணம் நடந்தது. ஏற்கனவே திருமண மண்டபத்தில் சடங்குகள் முடிவுற்ற நிலையில், மாலைகள் பரிமாற்றம் சடங்கு மட்டுமே மீதியிருந்ததால், அதனை காவல் நிலையத்தில் வைத்தே திருமண சடங்குகளை முடித்துக் கொண்டனர்.
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் அலோக் குமார் கூறுகையில், ‘புதுமண தம்பதியர் ராகுல் பிரமோத் மஹ்தோ – அஞ்சலி குமாரி ஆகிய இருவரும் பீகாரைச் சேர்ந்தவர்கள். அவர்களின் திருமணம் லட்சுமி ஹாலில் நடந்தது. விருந்தினர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட உணவில் பற்றாக்குறை ஏற்பட்டதால், மணமகன் குடும்பத்தினர் பிரச்னை செய்தனர். அதனால் ஏற்பட்ட சண்டையில் திருமணத்தை நிறுத்தும் அளவிற்கு சென்றுவிட்டனர். அந்தப் பெண்ணின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நாங்கள் தலையிட வேண்டியதாயிற்று. இருதரப்புக்கும் புரியவைத்து திருமணத்தை முடித்து வைத்தோம். தற்போது இரு தரப்பு குடும்பத்தினரும், மணமக்களும் மகிழ்ச்சியாக காவல் நிலையத்தில் இருந்து சென்றனர்’ என்றார்.
The post குஜராத் திருமண மண்டபத்தில் நடந்த வாக்குவாதம்; பந்தியில் உட்கார வைத்து சோறு போடாததால் கல்யாணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்: போலீஸ் பஞ்சாயத்துக்கு பின்னர் திருமணம் நடந்தது appeared first on Dinakaran.