
காந்திநகர்,
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.
இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து கடந்த சில தினங்களாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது.
இந்த நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 10-ந்தேதி அறிவித்தார். இதை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்தன.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து சமூக வலைதளங்களில் 'தேச விரோத' கருத்துகளை பதிவிட்ட 14 பேர் மீது குஜராத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் காவல்துறை கடந்த வாரம் முதல் தேச விரோத கருத்துகள் மற்றும் வதந்திகளை அடையாளம் காண சமூக ஊடகங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது. மாநில காவல்துறை இயக்குநர் ஜெனரல் விகாஸ் சகாயின் அறிவுறுத்தல்களை பின்பற்றி, இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநில டி.ஜி.பி. உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.