ஹைதராபாத்: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் விதிகளை மீறியதாக குஜராத் வீரர் இஷாந்த் ஷர்மாவிற்கு, பிசிசிஐ அவரது ஊதியத்தில் இருந்து 25% அபராதம் விதித்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மோசமான பந்துவீச்சைத் தொடர்ந்து, குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் இஷாந்த் ஷர்மாவுக்கு ஐபிஎல் விதிகளை மீறியதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அபராதம் விதித்தது. மேலும் ஒரு தகுதி இழப்பு புள்ளியையும் வழங்கியது.
இதற்கிடையில், இஷாந்த் மீது அபராதம் விதிக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. போட்டி முடிந்து 10 மணி நேரத்திற்குப் பிறகு இஷாந்த் தண்டிக்கப்பட்டார் என்ற பிசிசிஐயின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிசிசிஐ நடத்தை விதிகளின் பிரிவு 2.2 இன் கீழ் இஷாந்த் ஷர்மா ஒரு நிலை குற்றத்தைச் செய்துள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை இஷாந்த் ஒப்புக்கொண்டதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஷாந்த் உபகரணங்கள், ஆடைகள், மைதான உபகரணங்களை துஷ்பிரயோகம் செய்ததாகவும், சில உதவியாளர்களிடம் ஓரளவு அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது.
இந்தப் போட்டியில் இஷாந்த் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 53 ரன்கள் விட்டுக்கொடுத்தார். மீதமுள்ள குஜராத் வீரர்கள் 16 ஓவர்களில் வெறும் 99 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த சீசனில் நடத்தை விதிகளை மீறியதற்காக தண்டிக்கப்பட்ட இரண்டாவது வீரர் இஷாந்த் ஷர்மா ஆவார், சர்ச்சைக்குரிய கொண்டாட்டத்திற்காக லக்னோ அணி வீரர் திக்வேஷ் ஏற்கனவே தண்டிக்கப்பட்டுள்ளார்.
The post குஜராத் அணி பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவிற்கு அபராதம் பிசிசிஐ விதித்தது appeared first on Dinakaran.