
சென்னை,
'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் கவின். அதைத்தொடர்ந்து 'லிப்ட், 'டாடா' திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். கடைசியாக கவின் நடித்திருந்த 'பிளடி பெக்கர்' திரைப்படம் கலவையான வரவேற்பையே பெற்றது.
தற்போது கவின் 'கிஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபல நடன இயக்குனரான சதீஷ் இயக்கும் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக 'அயோத்தி' படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை பிரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் 'கிஸ்' பட டைட்டில் குறித்து கவின் பேசினார். அவர் கூறுகையில்,
'காதல் காமெடியோடு சேர்ந்து பேண்டசி படமாக 'கிஸ்'இருக்கும் . 'கிஸ்' டைட்டில் உரிமை மிஸ்கின் சாரிடம் இருந்தது. அவரிடம் இருந்துதான் இந்த டைட்டிலை வாங்கினோம். அவரிடம் டைட்டிலை கேட்டபோது 5 நிமிடங்கள் பார்த்துக்கொண்டே, எதற்காக இந்த டைட்டில் வேண்டும் என்று கேட்டார். முழு கதையும் கேட்ட பிறகுதான் டைட்டிலை கொடுத்தார்' என்றார்.