துரைப்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக நீலாங்கரையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை, நெடுஞ்சாலைத்துறையினர் இடித்து அகற்றினர். சென்னை மாநகரின் பிரதான நுழைவாயில் சாலைகளில் ஒன்றாக கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலை, திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான சாலை 15 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இச்சாலைப் பகுதியில் 17 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. எனவே, இச்சாலையை கடக்க சுமார் 45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை ஆகிறது. தற்போது, இச்சாலையில் 69,000 வாகனங்கள் தினசரி செல்கின்றன. திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான 15 கிலோ மீட்டர் தூரத்தில், சாலையின் இருபுறத்திலும் 347 சிறுசாலைகள், தெருக்கள் உள்ளன. இங்கு வரும் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், தகவல் தொழில்நுட்பத் துறையின் அதிவேக வளர்ச்சி மற்றும் பெருகிவரும் அடுக்குமாடி கட்டிடங்களின் எண்ணிக்கை காரணமாக, இவ்வழித்தடத்தில் வாகனப் போக்குவரத்து எண்ணிக்கை மிகவும் அதிகமாகி உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, கிழக்கு கடற்கரை சாலையை திருவான்மியூர் முதல் அக்கரை வரை 6 வழித்தடமாக மாற்ற தமிழ்நாடு அரசு முடிவு எடுத்து, கடந்த 2005ம் ஆண்டு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது. இச்சாலை விரிவாக்க பணிக்காக நிலம் எடுப்பு பணியானது பல்வேறு காரணங்களால் தாமதமானது. பின்னர், இச்சாலை விரிவாக்க பணிக்காக தமிழ்நாடு அரசு 2023ம் ஆண்டு ரூ.940 கோடி நிதி ஒதுக்கி, நிலம் எடுப்பு பணியினை தொடங்கியது. அதன்படி, தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இச்சாலை விரிவாக்கப் பணியானது, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம் மற்றும் நீலாங்கரை முதல் அக்கரை வரை என 4 கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கொட்டிவாக்கம், பாலவாக்கம் மற்றும் நீலாங்கரை முதல் அக்கரை வரை 3 கட்டங்களாகப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடிவுடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலஎடுப்பு செய்த இடங்களில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிவுற்ற இடங்களில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பயன்பாட்டு உபகரணங்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மின்சார உபகரணங்கள் மாற்றி அமைக்கப்பட்டவுடன், சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் குடிநீர் குழாய் மற்றும் பாதாள கழிவு நீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் இருபுறமும் நடைபெறும். இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில், நீலாங்கரை கபாலீஸ்வரர் வளைவு முதல் 200 மீட்டர் நீளமும் 10 முதல் 50 அடி வரை அகலம் உள்ள நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை நெடுஞ்சாலைத்துறையினர், நீலாங்கரை போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று இடித்து அகற்றினர்.
The post கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.