
குஜராத்,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 33 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த தொடரில் பெங்களூருவில் இன்று நடைபெறும் 34வது லீக் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது.
இந்த தொடரில் கடந்த 6ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் போது குஜராத் அணியின் வீரர் கிளென் பிலிப்ஸ் காயம் அடைந்தார். காயம் குணமடைய சில வாரங்கள் ஆகும் என்பதால் அவர் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகினார்.
பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஆல்ரவுண்ட் திறமை கொண்ட பிலிப்ஸ் தொடரில் இருந்து விலகியது குஜராத் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், காயம் காரணமாக விலகிய பிலிப்ஸ்-க்கு பதிலாக இலங்கையை சேர்ந்த ஆல்ரவுண்டர் தசுன் ஷனகாவை குஜராத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ளது.