
டெல்லி,
மாநில அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு 30 நாட்களுக்குள் கவர்னர் ஒப்புதல் தரவேண்டும். ஒப்புதல் அளிக்காத பட்சத்தில் அந்த மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும். கவர்னர் பரிந்துரைத்த மசோதாக்கள் மீது ஜனாதிபதி 90 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மசோதாக்கள் மீது முடிவு எடுக்கவில்லையென்றால் தக்க காரணங்களை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து சம்மந்தப்பட்ட மாநில அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அதிரடி உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு கவர்னருக்கு பாதகமானதாகவும், மாநில அரசுகளுக்கு சாதகமானதாகவும் பார்க்கப்படுகிறது. இதனிடையே, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் விமர்சனம் செய்தார்.
இந்நிலையில், 3 நாட்கள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி சென்றார். அவர் இன்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கரை சந்தித்தார். துணை ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது, மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு தொடர்பாக துணை ஜனாதிபதி தங்கர், கவர்னர் ஆர்.என்.ரவி ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.