60 வயதில் பா.ஜ.க. தலைவர் முதல் திருமணம்... தேன்நிலவு திட்டம் பற்றி சுவாரஸ்ய பதில்

17 hours ago 2

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வின் முன்னாள் தலைவராக இருந்தவர் திலீப் கோஷ் (வயது 60). இவர், கட்சியின் பெண் உறுப்பினரான ரின்கு மஜும்தார் (வயது 51) என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்டார். எளிமையாக நடந்த இந்த திருமணத்திற்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2021-ம் ஆண்டு, ஈகோ பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டபோது இருவரும் ஒருவரையொருவர் சந்தித்து கொண்டனர். கொல்கத்தா நகரில் நடந்த ஐ.பி.எல். போட்டியின்போது, தங்களுடைய உறவை முறைப்படுத்த அவர்கள் முடிவு செய்தனர்.

இந்நிலையில், தன்னுடைய 60 வயதில் திலீப் கோஷ் திருமணம் செய்துள்ளார். இது அவருக்கு முதல் திருமணம் ஆகும். ரின்குவுக்கு இது 2-வது திருமணம் ஆகும். அவருக்கு முன்பே திருமணம் நடந்து ஒரு மகன் உள்ளார்.

திருமணம் பற்றி மனம் திறந்து பேசிய கோஷ், இந்த சிறந்த நாளில், என்னுடைய தாயார் மற்றும் உறவினர்கள் எங்களை வாழ்த்தினர். அன்னையின் விருப்பத்திற்காக திருமணம் செய்து கொண்டேன். அவருடைய ஆசையை பூர்த்தி செய்வதற்காக திருமணத்திற்கு சம்மதித்தேன் என்றார். அவரிடம் தேன்நிலவு திட்டங்கள் பற்றி செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டதற்கு பதிலளித்த கோஷ், நாட்டின் ஏதேனும் ஒரு பகுதியில் அது நடக்கும் என கூறினார்.

நண்பர்கள் மற்றும் மக்கள் எல்லோருக்கும், அவர்களுடைய வாழ்த்துகளுக்காக நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நிறைய பேர் திருமணத்திற்கு வரவேண்டும் என விரும்பினர். எல்லோரையும் அழைக்க முடியவில்லை என்பதில் எங்களுக்கு வருத்தம் உள்ளது.

திருமணம் எளிமையாக, எங்களுடைய வீட்டினுள்ளேயே நடந்து முடிந்தது. நீங்கள் அனைவரும் எங்களுக்காக வெளியே காத்திருக்கிறீர்கள். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையானது, அரசியல் பணியில் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்திடாது என அவர் கூறினார்.

Read Entire Article