![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39110506-chennai-11.webp)
சென்னை,
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, பஸ் நிலையம் பகுதிகளில் ஓடும் ஆட்டோக்களின் ஓட்டுநர்களுக்கு தாம்பரம் காவல்துறைகடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. காவல்துறையிடம் அடையாள அட்டை பெற்ற பின்பே ஆட்டோக்களை ஓட்ட முடியும் எனவும், வாகன பதிவு எண்களை சரியான முறையில் ஆட்டோவில் தெரியும்படி இருக்க வேண்டும் எனவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தாம்பரம் போலீஸ் வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் விவரம்:-
*ஆட்டோ ஓட்டுநர்கள் காவல்துறையிடம் அடையாள அட்டை பெற வேண்டும் என தாம்பரம் போலிசார் அறிவுறுத்தல்.
*கிளாம்பாக்கத்தை சுற்றி ஏ.என்.பி.ஆர். கேமராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
*10க்கும் மேற்பட்ட இடங்களில் ஏ.என்.பி.ஆர். கேமராக்கள் பொருத்தப்பட்டு, காவல்துறை சார்பில் பூத் அமைக்கப்பட உள்ளது.
*காவல்துறையில் பதிவு செய்த ஆட்டோக்களை மட்டுமே கிளாம்பாக்கம் எதிரில் இருந்து இயக்க வேண்டும்.
*கிளாம்பாக்கத்தில் ஆட்டோவில் ஏறும் முன் பயணிகள் ஓட்டுனரின் பதிவுச் சான்றிதழை பரிசோதிக்கலாம்.
*வெளி ஆட்டோக்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டுச் செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
*கட்டுப்பாடுகளை மீறி இயங்கும் ஆட்டோக்களை பறிமுதல் செய்து ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.