கிளர்ச்சிப் படை வெற்றிக்குப் பின் சிரியாவில் புதிய அரசு அமைக்க ஏற்பாடு: இடைக்கால பிரதமராக முகமது அல் பஷீர் தேர்வு; உலக நாடுகள் ஆதரவு

1 month ago 5

டமாஸ்கஸ்: சிரியாவில் 54 ஆண்டு கால ஆசாத் குடும்பத்தின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (எச்டிஎஸ்) எனும் கிளர்ச்சிப் படை, கடந்த நவம்பரில் இருந்து ஒவ்வொரு நகரங்களை பிடித்து இறுதியாக தலைநகர் டமாஸ்கசை நேற்று முன்தினம் கைப்பற்றியது. இதனால், 29 ஆண்டாக ஆட்சி செய்த அதிபர் பஷர் அல் ஆசாத் நாட்டை விட்டு தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார். இதைத் தொடர்ந்து, பிரதமர் காஸி ஜலாலி ஆட்சி அதிகாரத்தை எச்டிஎஸ் படைத் தலைவர் அபு முகமது அல் கோலானியிடம் ஒப்படைத்துள்ளார். ஆசாத் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளதாலும் சிரியா மக்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், சிரியாவில் புதிய ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆட்சி அதிகார மாற்றம் சுமூகமாகவும் விரைவாகவும் நடக்க கேபினட் அமைச்சர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக பிரதமர் காஸி ஜலாலி கூறியுள்ளார். மேலும், நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றிய எச்டிஎஸ் படைத் தலைவர் அபு முகமது அல் கோலானி, ‘‘சிரியாவில் புதிய வரலாறு பிறந்துள்ளது. புதிய அரசு விரைவில் அமைந்ததும் உடனடியாக பணிகள் தொடங்கப்படும்’’ என்றார். இதைத் தொடர்ந்து, இடைக்கால அரசின் புதிய பிரதமராக முகமது அல் பஷீர் நியமிக்கப்பட்டிருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின.

இவர் ஏற்கனவே எச்டிஎஸ் படை கைப்பற்றி ஆட்சி செய்த சிரியா பகுதிகளுக்கு பிரதமராக இருந்தவர். இனி அல் பஷீர், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய ஆட்சி அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். அதிபர் ஆசாத் ஆட்சியில் பல எதிர்க்கட்சி தலைவர்கள் நாடு கடத்தப்பட்டனர். அவர்களை மீண்டும் சிரியாவுக்கு திரும்ப அழைத்து, அவர்களின் ஆதரவுடன் தேர்தல் நடத்தி முறைப்படியான அரசு தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் தொடங்கப்பட இருப்பதாக எச்டிஎஸ் படையினர் கூறி உள்ளனர்.

கிளர்ச்சிப் படை டமாஸ்கசில் நுழைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றம் நேற்று ஓரளவுக்கு தணிந்தது. டமாஸ்கசில் நேற்று பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தாலும், மக்கள் நடமாட்டம் சற்று அதிகரித்து காணப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பொது போக்குவரத்து தொடங்கப்படவில்லை. சில இடங்களில் கிளர்ச்சிப் படை வீரர்கள் ஆயுதம் ஏந்தி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இயல்பு நிலை திரும்பும் சூழல் உருவாகி உள்ளது. அதே சமயம், டமாஸ்கசில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்ட தங்கள் குடும்பத்தினரை தேடி பொதுமக்கள் பலரும் நேற்று குவிந்தனர்.

சிறையில் உள்ள ரகசிய அறைகள், அடித்தளங்களை உடைத்து கைதிகளை தேடினர். ஆசாத் ஆட்சியை எதிர்த்தவர்கள் பலரும் கொடூரமான சிறைகளில் கொடிய தண்டனைகளுக்கு ஆளாகினர். பல மாயமாகினர். அப்படிப்பட்டவர்கள் சிறையில் இருந்து வெளியேறி தங்கள் குடும்பத்தினருடன் இணைந்தனர். சிரியாவில் நிலையான அரசு அமைய சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பும் அவசியம். அந்த வகையில் எச்டிஎஸ் படையை ஆதரிக்கும் துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதே சமயம் ஈரான் உள்ளிட்ட நாடுகள் சிரியாவில் எச்டிஎஸ் அரசை ஏற்றுக் கொள்ளாது. அதிபர் ஆசாத்தின் வெளியேற்றம் சிரியாவில் ஈரானுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

* அகதியான ஆசாத் அடைக்கலம் தந்த ரஷ்யா
நாட்டை விட்டு தப்பி ஓடிய அதிபர் பஷர் ஆசாத் ரஷ்யாவில் அடைக்கலம் அடைந்துள்ளார். அவரை அரசியல் அகதியாக ஏற்றுக் கொண்டிருப்பதாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சிரியாவில் சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நிலையற்ற அரசால் நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ரஷ்யா கவலை தெரிவித்துள்ளது.

* பெண்களின் ஆடை சுதந்திரத்தில் தலையிட மாட்டோம்
கிளர்ச்சிப் படை தளபதியின் கட்டளைகள் என சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘‘பெண்களின் ஆடை விஷயத்தில் தலையிடுவது அல்லது ஆடை, தோற்றம் தொடர்பான எந்த கட்டாயமும் விதிக்கப்படாது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கப்படும். தனிநபர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பது நாகரீகமான தேசத்தைக் கட்டியெழுப்புவதே அடிப்படை கொள்கை’’ என கூறப்பட்டுள்ளது.

* 4,000 சிரியா வீரர்கள் ஈராக்கிற்கு தப்பி ஓட்டம்
அதிபர் பஷர் ஆசாத் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டதைத் தொடர்ந்து 4,000க்கும் மேற்பட்ட சிரியா ராணுவ வீரர்கள் எல்லையை தாண்டி ஈராக்கிற்கு தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆசாத் மற்றும் அவரது அதிகாரிகள் மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஐநா மனித உரிமை ஆணைய தலைவர் வோல்கர் துர்க் நேற்று தெரிவித்துள்ளார்.

* சிரியா பகுதியை கைப்பற்றிய இஸ்ரேல்
ஹிஸ்புல்லா போராளிக் குழுவின் முக்கிய கூட்டாளியாக இருந்த ஆசாத்தின் வீழ்ச்சியை இஸ்ரேலிய மக்கள் வரவேற்றுள்ளனர். ஆனாலும் கிளர்ச்சிப் படை தமையை சிரியாவில் நீடிக்குமா என்ற சந்தேகத்தில் இஸ்ரேல் உள்ளது. இதனால், கோலன் ஹைட்ஸ் பகுதியில் சிரியா படைகள் வெளியேறிய நிலையில், 1974ம் ஆண்டு உடன்படிக்கைக்கு முந்தைய நிலையின்படி சர்ச்சைக்குரிய அப்பகுதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தன்னிச்சையாக இந்த முடிவுக்கு எகிப்து கண்டனம் தெரிவித்துள்ளது. இதே போல சிரியாவில் பல பகுதிகளை பல்வேறு போராளி அமைப்புகள் கைப்பற்றி உள்ளன. அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு சிரியாவின் 60 சதவீத பகுதிகளை மட்டுமே தன்வசம் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post கிளர்ச்சிப் படை வெற்றிக்குப் பின் சிரியாவில் புதிய அரசு அமைக்க ஏற்பாடு: இடைக்கால பிரதமராக முகமது அல் பஷீர் தேர்வு; உலக நாடுகள் ஆதரவு appeared first on Dinakaran.

Read Entire Article