கில்லை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.. இங்கிலாந்து வீரரை விளாசிய மைக்கேல் வாகன்

4 hours ago 3

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 587 ரன்களும், இங்கிலாந்து 407 ரன்களும் குவித்தன. 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 6 விக்கெட்டுக்கு 427 ரன்னில் 'டிக்ளேர்' செய்து 608 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 68.1 ஓவர்களில் 271 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றியை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் ஜேமி சுமித் 88 ரன்கள் அடித்தார். வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளை அள்ளினார். முதல் இன்னிங்சில் இரட்டை சதமும், 2-வது இன்னிங்சில் சதமும் விளாசய இந்திய கேப்டன் சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 10-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்குகிறது.

இந்நிலையில் சுப்மன் கில்லை பார்த்து எப்படி விளையாட வேண்டும் என கற்றுக்கொள்ளுங்கள் என்று இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜாக் கிராலியை மைக்கேல் வாகன் விளாசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "பல ஆண்டுகளாக நான் உட்பட பல வீரர்கள் ரசிகர்களை விரக்தியடைய செய்திருக்கிறார்கள். ஆனால் அதில் ஜாக் கிராலி முதன்மையானவர். இங்கிலாந்துக்காக விளையாடிய வீரர்களில் அதிர்ஷ்டசாலி அவர்தான். ஏனெனில் 50-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெறும் 31 ரன்கள் சராசரியுடன் 5 சதங்கள் மட்டுமே அடித்திருக்கிறார். அப்படி இருக்கையில் அவர் தன்னை அதிர்ஷ்டசாலி என்று கருத வேண்டும்.

டெஸ்ட் வரலாற்றில் 2,500 ரன்களுக்கு மேல் எடுத்த அனைத்து தொடக்க வீரர்களிலும், அவர் மிகக் குறைந்த சராசரியைக் கொண்டுள்ளார். இப்படி ஒரு தொடக்க வீரர் விளையாடுவது சரியானது கிடையாது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 102 முறை பேட்டிங் செய்து 42 தடவை ஒற்றை இலக்கத்தில் அவுட்டானார். இதனை அவரால் மாற்ற முடியும்.

சுப்மன் கில்லை பாருங்கள். இந்த தொடருக்கு முன்னதாக சுப்மன் கில் 35 ரன்கள் சராசரியுடன் இங்கு வந்தார். ஆனால் தற்போது 4 இன்னிங்ஸ்களுக்கு பிறகு அவருடைய சராசரி 42-ஆக உயர்ந்துள்ளது. அவரது மனநிலை மற்றும் உத்தி காரணமாக அவர் இதைச் செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் எப்படி ஆட வேண்டும் என்பதை சரியாக புரிந்து கொண்ட சுப்மன் கில் பந்தை பார்த்து அதற்கேற்றவாறு ஆடுகிறார். அதன் காரணமாகவே அவரால் நீண்ட இன்னிங்க்ஸ் விளையாட முடிகிறது. அதேபோன்று ஜாக் கிராலியும் பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும்" என்று கூறினார்.

Read Entire Article