
பானிபட்,
அரியானாவின் பானிபட்டை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் கடந்த 24-ந் தேதி தனது கணவருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். ஏற்கனவே இப்படி சிலமுறை வீட்டை விட்டு வெளியேறினாலும் அவர் தானாகவே திரும்பி வந்ததால், கணவரும் அவரை தேடாமல் இருந்தார். ஆனால் 2 நாட்களாக அந்த பெண் வீடு திரும்பாததால் 26-ந் தேதி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
அப்போது கால் துண்டான நிலையில் சோனிபட் அருகே உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது வீட்டில் இருந்து வெளியேறிய அந்த பெண், பானிபட் அருகே உள்ள ரெயில் நிலையம் ஒன்றில் சோகமாக அமர்ந்து இருந்துள்ளார். அப்போது அந்த பெண்ணை அணுகிய ஒருவர், அவரது கணவர் அனுப்பியதாக கூறி அறிமுகமானார்.
பின்னர் அங்கே ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் ஒன்றின் காலி பெட்டியில் பெண்ணை அழைத்துச்சென்று மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அங்கு வந்த மேலும் 2 பேர் அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் விடாத அவர்கள், அவரை சோனிபட்டுக்கு கடத்தி சென்றனர். அங்கே ரெயில் தண்டவாளத்தில் அவரை வீசியுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ரெயிலில் அந்த பெண்ணின் கால் சிக்கி துண்டாகி உள்ளது.
காமக்கொடூரர்களின் மிகவும் காட்டுமிராண்டித்தனமான இந்த செயல் அரியானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பயங்கர சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து மீளாத அந்த பெண், ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பானிபட் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.