
சென்னை,
10 மற்றும் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. 8 லட்சத்து 23 ஆயிரத்த 261 பேர் எழுதிய இந்த தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள பதிவில்,
'10 மற்றும் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்தடுத்த வகுப்புகளில் மேலும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கு, கடின உழைப்பை மீண்டும் முதலீடு ஆக்குங்கள். தன்னம்பிக்கையோடு பற்பல சாதனைகள் புரிந்து தலைசிறந்து விளங்கிடவும், வாழ்வில் வெற்றி காணவும் வாழ்த்துகிறேன்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.