
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசு பதவியேற்ற நாளில் இருந்து, அதிமுக ஆட்சியில், மக்கள் நலன் கருதி செயல்படுத்தப்பட்டு வந்த பல்வேறு முத்தான திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்கியும், நீர்த்துப் போகவும் செய்துள்ளது. இச்செயல் மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
அந்த வகையில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்து வரும், திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையில், ஓசூர் மாநகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான திமுக அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் சார்பில் 15.4.2025 – செவ்வாய்க் கிழமை காலை 10 மணியளவில், ஓசூர், ராயக்கோட்டை ரோடு, அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும்; கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஞ.பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள்,
ஓசூர் மாநகராட்சி மாமன்ற இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும், ஓசூர் மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.