புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் அசோகன்(70). கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆன்லைனில் தொடர்பு கொண்ட மர்ம நபரின் வாக்குறுதியை நம்பி ரூ.98 லட்சத்தை முதலீடு செய்து ஏமாந்தார். இதுகுறித்து சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் அசோகன் அளித்த புகாரின்பேரில் போலீசார் மோசடி வழக்குபதிந்து கோவையை சேர்ந்த நித்திஷ்குமார் ஜெயின் (36), அரவிந்த்குமார் (40) ஆகிய 2 பேரை கடந்த மாதம் 26ம் தேதி கோவையில் கைது செய்து புதுவை மத்திய சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், கடந்த 2022ல் கோவையில் ஆஷ் பே எனும் பெயரில் நிறுவனம் தொடங்கி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களிடம் ரூ.60 கோடிக்கும் மேல் மோசடி நடந்திருப்பதும், இந்நிறுவனம் தொடர்பான விழாக்களில் பிரபல நடிகைகள் பங்கேற்றதும், பணம் முதலீட்டாளர்களுக்கு கார்களை நடிகை பரிசளித்ததும் தெரியவந்தது. மேலும் இதற்காக நடிகைகளுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டது தெரியவந்த நிலையில் 2 நடிகைகளுக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த மோசடியில் தொடர்புள்ள கோவையைச் சேர்ந்த 10 பேர் கும்பலை பிடிக்க எஸ்பி பாஸ்கரன் மேற்பார்வையில் சைபர் க்ரைம் பிரிவில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு தனிப்படை புதுச்சேரியில் விசாரணை நடத்தி, ஏற்கனவே சிறையில் உள்ள 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த மோசடியில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக பண பரிவர்த்தனையில் ஈடுபட்ட முக்கிய புள்ளி பஞ்சாப்பில் பதுங்கியிருப்பது தெரியவந்த நிலையில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான 4 பேர் கொண்ட தனிப்படை அங்கு முகாமிட்டுள்ளது. எஸ்ஐ ராதாகிருஷ்ணன் தலைமையிலான மற்றொரு தனிப்படை, கோவையில் முகாமிட்டு முக்கிய குற்றவாளிகளில் 3 பேரின் உறவினர்களை சுற்றிவளைத்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். மோசடியில் தொடர்புடைய, தலைமறைவு குற்றவாளிகளின் விவரங்கள் குறித்து அண்டை மாநில போலீசாருக்கும் புகைப்படங்களுடன் அனுப்பி தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
The post கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு முக்கிய புள்ளிகளை பிடிக்க பஞ்சாப், கோவையில் 2 தனிப்படைகள் முகாம் appeared first on Dinakaran.