
புதுடெல்லி,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது.
இதனால், 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 267 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இந்த வெற்றியை, பல இடங்களில் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். தேசிய கொடியை உயர்த்தி பிடித்தபடியும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து 3-வது முறையாக இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறி உள்ளது. மொத்தம் 5-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டிக்குள் இந்தியா நுழைந்துள்ளது.
இதனால், சத்தமின்றி ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவர், 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் முழுநேர கேப்டன் ஆனார். அப்போது இருந்து பல்வேறு சாதனைகளை இந்தியா படைத்தது. இந்த 3 ஆண்டு காலத்தில், ஐ.சி.சி.யின் ஒவ்வொரு போட்டி தொடரின் இறுதி போட்டிக்கும் இந்தியா முன்னேறியது.
இதனால், ஐ.சி.சி.யின் அனைத்து வகையான போட்டி தொடரின் இறுதி போட்டிக்கும் அணியை அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். இதனால், கிரிக்கெட் போட்டியில் இதுவரை பார்த்திராத சிறந்த கேப்டன்களில் ஒருவராக உருவாகி உள்ளார்.
2023-ம் ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரை இந்தியா முன்னேறியது. எனினும், இறுதி போட்டியில் தோல்வியை தழுவியது.
அதே ஆண்டில், ஒரு நாள் சர்வதேச உலக கோப்பை கிரிக்கெட் 2023 போட்டி தொடரில் தோல்வியே அடையாமல் இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதில், இந்திய அணியையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது.
எனினும், 2024-ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை இறுதி போட்டியின்போது, இந்த வேதனைகளை துடைத்தெறியும் வகையில், திறமையாக அணியை வழிநடத்தி சென்றார் ரோகித். இதனால், 2007-ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக கோப்பையை இந்திய அணி வெல்ல உதவினார். அதிலும் எந்தவொரு போட்டியிலும் தோல்வியை தழுவாமல் இந்தியாவுக்கு இந்த வெற்றி கிடைத்தது.
ரோகித்தின் சாதனை பட்டியலில், சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடர் மட்டும் மீதமிருந்தது. இதிலும், இறுதி போட்டிக்கு இந்திய அணியை தலைமையேற்று நடத்தி சென்று வரலாறு படைத்துள்ளார்.