
சென்னை,
பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று (புதன்கிழமை) தொடங்க இருக்கிறது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்து 557 பள்ளிகளில் இருந்து, 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்கள், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 369 பேர் எழுத உள்ளனர்.
இதுதவிர தனித்தேர்வர்களாக 4 ஆயிரம் பேரும், சிறைவாசிகள் 137 பேரும் பொதுத் தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்களில் பிளஸ்-1 பொதுத் தேர்வை மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள். தேர்வில் முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 470 பறக்கும் படைகளும், தேர்வுப் பணிகளில் 44 ஆயிரத்து 236 தேர்வறை கண்காணிப்பாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகளை சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.
முதல் நாளில் தமிழ் உள்பட இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடக்க இருக்கிறது. இன்று தொடங்கும் தேர்வு, வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் 2 முதல் 4 நாட்கள் வரை இடைவெளி விட்டு நடைபெறுகிறது.