இறுதிப்போட்டியில் இந்தியாவை சந்திக்கப்போவது யார்..? இன்று 2-வது அரைஇறுதிப்போட்டி

16 hours ago 1

லாகூர்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று பகல்-இரவு மோதலாக அரங்கேறிய முதலாவது அரைஇறுதியில் 'நம்பர் ஒன்' அணியான இந்தியா, உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த அரைஇறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடக்கும் 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான நியூசிலாந்தும், தென்ஆப்பிரிக்காவும் மோதுகின்றன.

மிட்செல் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி லீக் சுற்றில் 'ஏ' பிரிவில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தை தோற்கடித்தது. இந்தியாவிடம் 44 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது. சமீபத்தில் இதே மைதானத்தில் நடந்த முத்தரப்பு தொடரின் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 305 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இருந்தது. அதனால் கூடுதல் நம்பிக்கையுடன் நியூசிலாந்து அணியினர் களம் காணுவார்கள்.

தென்ஆப்பிரிக்க அணி 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியும் பார்க்க வலுவாகவே தெரிகிறது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக்கின் போது வலது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் பாதியில் வெளியேறிய மார்க்ரம் இந்த ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான். இதை கருத்தில் கொண்டு அணிக்கு சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ஜார்ஜ் லின்டே அழைக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 73 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 26-ல் நியூசிலாந்தும், 42-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டத்தில் முடிவில்லை. சாம்பியன்ஸ் கோப்பையில் மோதி உள்ள இரு ஆட்டங்களில் தலா ஒன்றில் வெற்றி கண்டுள்ளன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

நியூசிலாந்து:

வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), மேட் ஹென்றி, கைல் ஜாமிசன், வில்லியம் ஓ ரூர்கே.

தென்ஆப்பிரிக்கா:

ரையான் ரிக்கெல்டன், பவுமா (கேப்டன்), வான்டெர் டஸன், ஹென்றிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்க்ரம் அல்லது லின்டே, வியான் முல்டெர், மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ், ககிசோ ரபடா, லுங்கி இங்கிடி.

இன்றைய அரைஇறுதிப் போட்டியில் வெல்லும் அணியை, இந்தியா வரும் 9ம் தேதி இறுதிப்போட்டியில் சந்திக்க உள்ளது.

Read Entire Article