செங்கல்பட்டு: சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி (திமுக) பேசுகையில், ‘செங்கல்பட்டு தொகுதி, காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டமங்கலம் ஊராட்சியில் 3 கிமீ நீளமுள்ள முக்கிய சாலை மிகவும் பழுதடைந்து, பயன்படுத்த இயலாத நிலையில் இருக்கின்றது. இந்த கிராம சாலையானது, ரூரல் ரோடு ஆக வகைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் இந்தச் சாலையின் முக்கியத்துவம் கருதி, பக்கவாட்டு கால்வாயுடன்கூடிய சாலை அமைத்து தர வேண்டும்’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘தமிழ்நாட்டு முதல்வரால் இதுபோன்ற கிராமச் சாலைகள் அனைத்தும், மாநில நெடுஞ்சாலைத் துறையின்மூலம் அமைக்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே ஆணை பிறப்பிக்கப்பட்டு, அரசு இது வரை 4,000 கிமீ சாலைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அவற்றில், மூன்று பங்கு பணிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டன. எஞ்சியுள்ள 25 சதவிகிதப் பணிகள் இந்த ஆண்டு நடைபெறவிருக்கின்றன. எனவே, அந்தப் பட்டியலில் இது இடம்பெறுமேயானால், அந்தச் சாலை இந்த ஆண்டே வந்துவிடும். ஊரக உள்ளாட்சியின் சார்பாக 4,000 கிமீ சாலை அமைப்பதற்காக, நிதி ஒதுக்கப்பட்டு, அந்தப் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன. உறுப்பினர் குறிப்பிடுகின்ற அந்தச் சாலை மாநில நெடுஞ்சாலையில் வருமேயானால், இந்த ஆண்டு அந்தப் பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும்’ என்றார்.
The post கிராம சாலையானது, ரூரல் ரோடு ஆக வகைமாற்றத்தை கருதி பக்கவாட்டு கால்வாயுடன்கூடிய சாலை: சட்டசபையில் எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.