கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் - ராமதாஸ்

4 hours ago 2

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ. 818.50 லிருந்து ரூ.868.50 ஆக அதிகரித்திருக்கிறது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.

கியாஸ் விலை உயர்த்தப்பட்டதற்காக அரசால் கூறப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை ஆகும். உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 60 டாலர் என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்பு ஈடு செய்யப்பட்டு விட்டதால், பெட்ரோல், டீசல் விலைகள் விரைவில் குறையக்கூடும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி கடந்த வாரம் கூறியிருந்தார். ஆனால், அதற்கு மாறாக சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பது நியாயமல்ல.

அதேபோல், கச்சா எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல், டீசல் விற்பனையின் லாபம் எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிகரித்துள்ள நிலையில், அதை நுகர்வோருக்கு வழங்காமல் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியதன் மூலம் மத்திய அரசே அதை எடுத்துக் கொண்டதும் தவறு ஆகும்.

எண்ணெய் நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவை. அவை மக்களைச் சுரண்டக் கூடாது. அதேபோல், மத்திய அரசும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய விலைக் குறைப்பு நன்மையை தானே எடுத்துக் கொள்ளக் கூடாது. சமையல் எரிவாயு விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதேபோல், கலால்வரி உயர்வை திரும்பப் பெறுவதன் மூலம் பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தது ரூ.2 குறைவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Read Entire Article