
நாட்டிங்காம்,
இங்கிலாந்து - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து இங்கிலாந்தின் தொடக்க வீரர்களாக பென் டக்கட் மற்றும் ஜாக் கிராவ்லி களம் புகுந்தனர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பென் டக்கெட்டும், ஜாக் கிராவ்லியும் முதல் விக்கெட்டுக்கு 231 ரன்கள் திரட்டினர். இதில் பென் டக்கட் 140 ரன்னிலும், ஜாக் கிராவ்லி 124 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் புகுந்த ஆலி போப்பும் அதிரடியாக ஆடினார். இதனால் ரன் மளமளவென உயர்ந்தது.
மறுபுறம் ஜோ ரூட் 34 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஹாரி புரூக் களம் புகுந்தார். அதிரடியாக ஆடிய ஆலி போப்பும் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 498 ரன்கள் குவித்தது. ஆலி போப் (169 ரன்), ஹாரி புரூக் (9 ரன்) களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.