வேலூர்: காட்பாடி கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை 44 மணி நேரத்துக்குப் பிறகு முடிவுற்றது. நள்ளிரவில் ஆவணங்கள், ஹார்டுடிஸ்களுடன் 8 கார்களில் அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகரில் நீர்வளத்துறை அமைச்சரான துரைமுருகன் வீடு உள்ளது. இவரது மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதி எம்பியாக உள்ளார். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். அமைச்சர் துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் ஆனந்தின் அறக்கட்டளை சார்பில் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் நடத்தப்பட்டு வரும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிஆர்பிஎப் போலீஸ் பாதுகாப்புடன் 3-ம் தேதி காலை சோதனையில் ஈடுபட்டனர்.