சென்னை:தமிழக காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி, டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் உள்ளடக்கிய குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவில் உறுப்பினராக இருந்த சென்னை காவல்துறை துணை ஆணையர் சக்தி கணேசன், அயலகப் பணிக்கு பணி மாறுதலாக சென்ற நிலையில், அந்த இடத்தை நிரப்பக் கோரி விசாகா கமிட்டி குழு தலைவர் சீமா அகர்வால், டிஜிபி சங்கர் ஜிவாலிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி மறுசீரமைப்பு செய்யப்பட்டு புதிய உறுப்பினரை நியமித்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அக்குழுவின் தலைவராக டி.ஜி.பி சீமா அகர்வால் தலைவராக தொடர்வார். உறுப்பினர்களாக, சென்னை காவல்துணை தலைமையக கூடுதல் ஆணையர் கபில் குமார் சர்த்கர், தலைமையக ஐ.ஜி சாமூண்டீஸ்வரி ஐ.பி.எஸ்., சிபிசிஐடி எஸ்பி சண்முக பிரியா, தலைமையக அதிகாரி ரவிச்சந்திரன், சர்வதேச நீதிக்குழு மேலாண்மை அதிகாரி லொரேட்டா ஜோனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் சென்னை காவல் துறையில் போக்குவரத்து இணை ஆணையராக இருந்த மகேஷ் குமார் ஐ.பி.எஸ் பாலியல் புகாரில் சிக்கிய போது விசாகா கமிட்டி விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ததன் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டியை மறுசீரமைப்பு செய்து புதிய உறுப்பினர்கள் நியமனம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு appeared first on Dinakaran.