காளான் வளர்ப்பில் கலக்கல் வருமானம்!

2 weeks ago 5

விவசாய நிலம் இல்லை, எந்த தொழிலும் தெரியாது, ஆனால் சாதிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு காளான் வளர்ப்பு நல்ல சாய்ஸ். அதிலும் இல்லத்தரசிகளுக்கு இது மிகவும் ஏற்ற தொழில். ஆர்வம் இருந்தால் போதும், யாரும் சாதிக்கலாம் என உற்சாகமாக பேசத் துவங்குகிறார் ஜீவிதா கிரிசங்கர். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் பக்கோதி பாளையத்தை சேர்ந்தவர்தான் இந்த ஜீவிதா கிரிசங்கர். தன் கணவருடன் இணைந்து எளிமையான முறையில் காளான் வளர்ப்பைத் தொடங்கிய இவர், இப்போது காளான் வளர்ப்பில் கலக்கலான வருமானம் பார்த்து வருகிறார். ஒரு காலைப்பொழுதில் தங்களது காளான் ஷெட்டில் அறுவடைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜீவிதா கிரிசங்கரைச் சந்தித்தபோது மேலும் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“ சிறு வயதில் இருந்தே நாம் ஏதாவது தொழில் செய்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அதற்காக என்ன செய்யலாம் என்ற யோசனை எனக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். என்னுடைய கணவர் கிரிசங்கர் தனியாக தொழில் செய்து வந்தாலும், குடும்பத்தில் ஒருவர் மட்டும் வேலைக்கு சென்றால் போதாது, இருவரும் வேலைக்கு சென்றதால்தான் கையைக் கடிக்காமல் குடும்பத்தை நடத்த முடியும் என்று நினைத்தேன். அதற்காக இட்லி, தோசை மாவு பிசினஸைத் தொடங்கினேன். வீட்டிலேயே மாவு அரைத்து அதை பேக் செய்து பொள்ளாச்சியில் இருக்கும் கடைகளுக்கு விநியோகம் செய்யத் தொடங்கினேன். இந்த வருமானமும் எங்களுக்கு போதுமானதாக இல்லை.அவருக்கு காளான் வளர்ப்பில் ஈடுபட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதற்காக வேளாண்மைத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற காளான் வளர்ப்பு பயிற்சியில் கலந்து கொண்டார். எனக்கும் காளான் வளர்ப்பு பற்றி சொல்லிக் கொடுத்தார். பின்னர் நாங்கள் இருவரும் இணைந்து காளான் வளர்ப்பில் ஈடுபடலாம் என்று முடிவு செய்தோம். அதன்படி கோயம்புத்தூர் வேளாண்மைத் துறை அலுவலகத்தில் இருந்து காளான் விதைகளை வாங்கி வந்து காளான் வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கினோம். முதன்முதலில் 10 க்கு 10 கூரையில் 50 காளான் படுக்கைகள் மட்டும் அமைத்து காளான் வளர்ப்பை ஆரம்பித்தோம். 2021ல் பட்டன் காளான் உற்பத்தி அதிகளவில் இருந்தது. அப்போது நாங்கள் சிப்பிக்காளான் வளர்த்து விற்பனைக்கு கொண்டு சென்றோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எதிர்பார்த்ததை விட நல்ல உற்பத்தி கிடைத்தது. இதன் பின்னர் 10×60 மற்றும் 11×94 என்ற அளவில் இரண்டு கூரைகள் அமைத்து காளான் வளர்ப்பை விரிவுபடுத்தினோம்.

ஒரு கொட்டகையில் 1000 காளான் படுக்கைகளும் மற்றொரு கொட்டகையில் 1800 படுக்கைகளும் அமைத்திருக்கிறோம். 12 க்கு 24 அளவுள்ள ஒரு பாலித்தீன் பையில் காளான் உற்பத்தி செய்வது சரியாக இருக்கும். இதைவிட சிறிய பையாக இருந்தால் கூரையில் கட்டி வைக்கும்போது பாரம் தாங்காமல் கீழே விழுந்துவிடும். கொட்டகையின் பக்கவாட்டில் நான்கு பக்கமும் காற்று உள்ளே செல்லும் வகையிலும், சூட்டை உள்ளே கடத்தாத வகையிலும் சாக்குப்பைகளை ஈரம் செய்து கட்டி வைத்திருக்கிறோம். ஒரு படுக்கை அமைக்க 200 கிராம் காளான் விதைகள் தேவைப்படும். காளானுக்கான படுக்கை அமைக்க நாங்கள் மரத்தூள் மற்றும் வைக்கோலைப் பயன்படுத்துகிறோம். முதன்முறையாக மரத்தூளில் காளான் படுக்கை அமைப்பது சற்று சவாலாகத்தான் இருந்தது. இந்த மரத்தூளை (சாப்ட் வுட்) கேரளாவில் இருந்து வாங்கி வருகிறோம். மரத்தூளை சுடுதண்ணீரில் 8 மணிநேரம் ஊற வைத்து மறுநாள் அதை பாலீத்தின் பையில் போட்டு விதையைத் தூவுவோம். தற்போது மரத்தூளில் 20 படுக்கை உள்ளது. மற்ற அனைத்தும் வைக்கோல்தான். காளான் படுக்கை அமைக்க வைக்கோலை 16 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பின் உலர வைப்பேன். வைக்கோலை ஊற வைக்கும் தண்ணீரின் பிஎச் அளவு 6.5 – 7.5 இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் நாங்கள் பிஎச் லெவல் பார்த்ததே இல்லை.

நான் இதுவரையில் வைக்கோலை ஊற வைக்க போர் தண்ணீரை மட்டும்தான் பயன்படுத்துகிறேன். ஊற வைத்த வைக்கோலை எடுத்து பாலீத்தின் பையில் அடுக்கடுக்காக வைப்பேன். இதில் மொத்தம் 5 அடுக்கு இருக்கும். முதல் அடுக்கில் 5 செமீ, 5வது அடுக்கில் 5 செமீ விதை தூவுவேன். நடுவில் இருக்கும் மூன்று அடுக்கில் 8 செமீ இருக்கும் அளவிற்கு படுக்கை அமைத்து விதைகளைத் தூவுவேன். பாலித்தீன் கவரில் உறி போன்று கட்டி தொங்க விடுவோம். இதைத் தொடர்ந்து காளான் வளர்ந்து வெளியே வருவதற்கு ஏதுவாக அனைத்து பைகளிலும் 16 துளையிடுவேன். கொட்டகையின் சுற்றுப்புற வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸில் உள்ளதா? என்று அவ்வப்போது பார்ப்பேன். மேலும் அந்த அறையின் வெப்பநிலையைக் குறைக்க அவ்வப்போது என்னுடைய மாமனாரும், அத்தையும் தண்ணீரைத் தெளிப்பார்கள். அறையின் வெப்பநிலைக்கு ஏற்ப தண்ணீரை அவ்வப்போது தெளித்தால் காளான் நன்கு வளரும். இதே வெப்பநிலையில் 19 நாட்கள் பராமரிப்பேன். 19 நாளில் காளான் நன்கு வளர்ந்திருக்கும். அதை எடுத்து பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பி விடுவேன்.

காளானை 19 நாட்களுக்குப் பிறகு 8 நாளைக்கு ஒருமுறை அறுவடை செய்வேன். சராசரியாக ஒரு காளான் படுக்கையில் இருந்து 65 லிருந்து 70 நாட்கள் வரை அறுவடை செய்வோம். சராசரியாக ஒரு படுக்கையில் இருந்து ஒரு கிலோ காளான் கிடைக்கும். அப்படிப் பார்த்தல் ஒரு ஷெட்டில் 1000 கிலோ காளானும், மற்றொரு ஷெட்டில் அமைத்துள்ள படுக்கைகளில் இருந்து 1800 கிலோ காளானும் கிடைக்கிறது. அறுவடை செய்த காளானை கரூர், பொள்ளாச்சி, கோவை, ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கிச் செல்கிறார்கள். நாங்கள் ஒரு கிலோ காளானை ரூ.200க்கு விற்பனை செய்கிறோம். எங்களுக்கு 2800 கிலோ காளானில் இருந்து 70 நாளில் ரூ.5.6 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. இதில் 25 சதவீதம் செலவு போக ரூ.4.2 லட்சம் லாபமாக கிடைக்கிறது. 40 நாட்களாக மரத்தூளில் படுக்கை அமைத்து அறுவடை செய்ததில் எங்களுக்கு ஒரு படுக்கையில் இருந்து 700 கிராம் மகசூல் கிடைத்துள்ளது. தற்போது காளானை ஊறுகாயாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்யத் தொடங்கி இருக்கிறோம். 200 கிராம் ஊறுகாயை ரூ.110க்கு வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறேன். ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதாக சொல்வார்கள். ஆனால் என்னுடைய இந்த வெற்றிக்குப் பின்னால் என் கணவர் கிரிசங்கரும், எங்கள் குடும்பமும் இருக்கிறது’’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தொடர்புக்கு:
ஜீவிதா கிரிசங்கர்: 93426 82896.

The post காளான் வளர்ப்பில் கலக்கல் வருமானம்! appeared first on Dinakaran.

Read Entire Article