
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷை வைத்து 'பொல்லாதவன், ஆடுகளம்' போன்ற படங்களை தயாரித்தவர் பைவ் ஸ்டார் கதிரேசன். இந்த நிலையில், தயாரிப்பாளர் கதிரேசன் தனுஷ் மீது குற்றம் சாட்டி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணிக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், "கடந்த வருடம் தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் நடிகர் தனுஷ் எங்களிடம் முன்பு முன்பணம் பெற்றுக்கொண்டு இன்றுவரை கால்ஷீட் தரவில்லை என்று மனவேதனைகளை பதிவுசெய்தேன்.
தயாரிப்பாளர்கள் சங்கமும் தனுஷ் எங்கள் நிறுவனத்திற்கு படம் நடித்து தரவேண்டும் என்று பேசிக் கொண்டு இருக்கும்போதே நீங்கள் குறுக்கிட்டு, "இட்லிகடை"படப்பிடிப்பு நடக்கவேண்டும், "மேலிடத்து உத்தரவு" என்று கூறியதை மறந்தீரோ? அக்டோபர் 30-ந் தேதிக்குள் எங்கள் நிறுவனத்திற்கு நியாயம் வாங்கித் தருவதாக உறுதியளித்தீர்கள். நாங்கள் புதிதாக படம் தயாரிக்கவில்லை, ஏற்கனவே தனுஷ் அவர்கள் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தயாரித்த நிறுவனம் என்று தங்களுக்கு நினைவு படுத்துகிறேன். நீதி வழங்கத்தானே சங்கங்கள் உள்ளன? தங்களின் அரசியல் குறுக்கீட்டால் இன்று வரை எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.
இதற்கிடையில் தயாரிப்பாளர் கதிரேசன் பிரச்சினை செய்கிறார் என்று சொல்வது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. எங்களது வலியை உணர்ந்து விரைவில் நியாயம் பெற்றுத்தருமாறு தயாரிப்பாளர் சங்கத்தை வேண்டிக்கொள்கிறேன். தாங்கள் எடுக்கும் முடிவு அனைத்து தயாரிப்பாளர்களின் நலன் கருதியே. இதில் அரசியல் கலக்காமல் இருக்க ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அதில் தெரிவித்துள்ளார்.