கால்பந்து விளையாட்டு மைதானம் தனியார்மயம் - தீர்மானம் வாபஸ்

2 months ago 15

சென்னை,

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் நேற்று மேயர் பிரியா தலைமையில் அக்டோபர் மாதத்துக்கான மாதாந்திர மன்றக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் ஒன்றாக சென்னை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள 9 கால்பந்து விளையாட்டுத் திடல்களை (செயற்கை புல்) தனியார் பராமரிப்புக்கு வழங்க முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, வியாசர்பாடி முல்லைநகர், நாவல் ஆஸ்பத்திரி சாலை, திரு.வி.க.நகர் விளையாட்டு திடல், ரங்கசாய் விளையாட்டுத் திடல், கே.பி.பார்க் விளையாட்டுத் திடல், மேயர் சத்தியமூர்த்தி சாலையில் உள்ள அம்பேத்கர் விளையாட்டுத் திடல், கோடம்பாக்கம் அம்மா மாளிகை விளையாட்டு திடல், காமகோட்டி நகர் 6-வது சாலை, சோழிங்கநல்லூர் ஓ.எம்.ஆர். சாலை ஆகிய கால்பந்து திடல்கள் ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கப்பட இருந்தது.

இந்த கால்பந்து மைதானத்தில் ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் ரூ.120 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 10 பேர் கொண்ட குழுவாக விளையாடும் பட்சத்தில் ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,200 கட்டணம் வசூலிக்கப்படும். மாநகராட்சியின் அரங்கத்துரையின் மூலம் டெண்டர் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கால்பந்து விளையாட்டுத்திடல்களை தனியாரிடம் வழங்க அ.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர்கள் கால்பந்து விளையாடி நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் அதேபோல் கூட்டத்தில், சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கம் மற்றும் செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தை தனியாருக்கு 5 ஆண்டுகள் குத்தகைவிட அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில், 595 பூங்காக்களை வருடாந்திர பராமரிப்பு அடிப்படையில் தனியாருக்கு வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து செயற்கைப் புல் விளையாட்டு மைதானங்களை, தனியார் பராமரிப்புக்கு வழங்கி கட்டணம் நிர்ணயம் செய்ய நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மாநகராட்சி திரும்ப பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சியின் முடிவிற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த முடிவை திரும்ப பெறுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Read Entire Article