
இஸ்லாமாபாத்,
பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்டவே இந்தியா அவர்களது 9 பயிற்சி முகாம்களை தாக்கி அழித்தது. இந்த நடவடிக்கையின்போது பாகிஸ்தான் ராணுவ நிலைகளையோ அல்லது பாகிஸ்தான் மக்களை பாதிக்கும் வகையிலோ இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று மத்திய அரசு 2 பெண் ராணுவ அதிகாரிகள் மூலம் உலகுக்கு தெள்ள தெளிவாக விளக்கியது. ஆனால் ஆணவம் பிடித்த பாகிஸ்தான் நேற்று இரவு தேவையில்லாமல் இந்தியாவில் மக்கள் வாழும் பகுதிகள் மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. அந்த முயற்சிகள் அனைத்தையும் இந்திய பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக முறியடித்தன. அதோடு விடிய விடிய பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்தியாவின் முப்படைகளும் கலந்து ஒருங்கிணைந்து தாக்குதலை நடத்தின. இதனால் பாகிஸ்தான் ராணுவம் சற்று மிரண்டு போய் உள்ளது.
என்றாலும் சீனா கொடுத்து இருக்கும் ஆயுதங்கள் உதவியுடன் மீண்டும் இந்தியாவிடம் பாகிஸ்தான் வாலாட்ட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதை கருத்தில்கொண்டு இந்தியா அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது. இந்தநிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் கட்சி எம்.பி.ஷாகித் அகமத் என்பவர் அந்நாட்டை விமர்சித்து கடும் குற்றச்சாட்டை கூறியுள்ளார். அதில், பாகிஸ்தான் பிரதமர் இந்திய பிரதமரின் பெயரை உச்சரிக்க கூட பயப்படுகிறார் அவர் ஒரு கோழை. பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை உச்சரிக்கக்கூட அவருக்கு தைரியம் இல்லை. பாகிஸ்தானின் நரிப்படையால் சிங்கங்களை எதிர்த்துப் போராட முடியாது என கூறியுள்ளார்.
இதேபோல பாகிஸ்தானில் அந்நாட்டு எம்.பி பாகிஸ்தான் முன்னாள் மேஜர் தாஹிர் இக்பால் கதறி அழுத வீடியோ வைரலாகியது. அந்த வீடியோவில் அவர், "அல்லாஹ் நம்மை காப்பார்.. உலகில் எங்கு பார்த்தாலும் நாம் பின்தங்கி இருக்கிறோம், நாங்கள் தவறு செய்துவிட்டோம், ஆனால் கடவுளே நாங்கள் உங்களின் ஆதரவாளர்கள்.. கடவுளே எங்கள் மீது கருணை காட்டு" எனக் கூறி கதறி அழுதுள்ளார்.