சித்ரா பவுர்ணமி கிரிவலம்: தாம்பரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

8 hours ago 1

திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு வருகை தந்து கிரிவலம் செல்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு வரும் மே 11, 12 தேதிகளில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், பக்தர்களின் வசதிக்காகவும் தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 12 பெட்டிகள் கொண்ட முன்பதிவில்லா சிறப்பு மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வருகிற 11-ந்தேதி காலை 11.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (06137) புறப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுமார்க்கமாக 11-ந்தேதி மாலை 5 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து சிறப்பு ரெயில் (06138) புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article