தஞ்சாவூர், ஜன. 8: தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் முன்பு நேற்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ரமேஷ், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கோவிந்தராஜன், மாநில துணை பொதுச்செயலாளர் ரங்கசாமி, மாவட்ட சிலர் தேசிங்கு ராஜன் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.
மாநில செயற்குழு உறுப்பினர் ஆண்டனி ஜான் பிரிட்டோ, மாவட்ட பொருளாளர் ஜெயந்தி உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். போராட்டத்தில், வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். வளர்ச்சித் துறை ஊழியர் மீது திணிக்கப்படும் பிறத்துறை பணிகளை முற்றிலும் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
The post காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி ஊரக வளர்ச்சித்துறையினர் சாலை மறியல் appeared first on Dinakaran.