கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று பயிர்; விவசாயிகளின் வாழ்வாதாரம் வளப்படுத்த திராவிட மாடல் ஆட்சி உரிய நடவடிக்கை

3 weeks ago 5

திருவாரூர், டிச. 25: கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று பயிர், விவசாயிகளின் வாழ்வாதாரம் வளப்படுத்த திராவிட மாடல் ஆட்சி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது பருத்தியில் நல்ல விளைச்சல் உள்ளது என்று மன்னார்குடியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியும் அதற்கு அடுத்தபடியாக பச்சை பயிறு மற்றும் உளுந்து சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்த நிலையில் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று பயிர்களையும் பயிரிடும் நிலைக்கு மாறினர். அதன்படி நெல் சாகுபடியடுத்து பச்சை பயிறு மற்றும் பருத்தி பயிர், வாழை, கரும்பு, கடலை, மரவள்ளி கிழங்கு உட்பட பல்வேறு பயிர்களையும் சாகுபடியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமாக 20 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே இந்த பருத்தி சாகுபடியானது நடைபெற்று வந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பின்னர் கடந்த 2021ம் ஆண்டு முதல் இந்த பருத்தி பயிருக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் சாகுபடி பரப்பளவானது 2 மடங்காக அதிகரித்து 40 ஆயிரம் ஏக்கரில் கடந்த 3 ஆண்டுகளாக சாகுபடியானது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வரும் ஆண்டில் வழக்கத்தை விட கூடுதலான பரப்பளவில் இந்த பருத்தி பயிரினை விவசாயிகள் சாகுபடி செய்யும் வகையிலும் தரமான விதையினை கொண்டு அதிகளவில் மகசூல் பெற்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாகவும் ஆலோசனை கூட்டமானது திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறையின் சார்பில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் சாரு, எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன், மாவட்ட ஊராட்சித்தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேசியதாவது, தொழிற்வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அதே வேளையில் ஒவ்வொரு முறையும் விவசாயிகள் பயன்பெறும்வகையில், தொழில் முதலீட்டாளர்கள் வருகையின்போது விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையிலும், அவார்களின் வருமானத்தினை அதிகரிக்கும் வகையிலும் பல்வேறு புதிய நடவடிக்கைகளை திராவிட மாடல் முதல்வர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் இன்று (நேற்று) விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடி குறித்த வழிகாட்டுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பருத்தி நல்ல முறையில் விளைச்சல் ஏற்பட்டு, விவசாயிகள் பயன்பெறுவார்கள் என தெரிவித்தார்.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் பாலசரஸ்வதி, துணை இயக்குநர் லெட்சுமிகாந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ராஜா (பொது), ஹேமா ஹெப்சிபா நிர்மலா (வேளாண்மை), திருவாரூர் நகராட்சி துணைத்தலைவர் அகிலாசந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று பயிர்; விவசாயிகளின் வாழ்வாதாரம் வளப்படுத்த திராவிட மாடல் ஆட்சி உரிய நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article