
சென்னை,
கடந்த 2022-ம் ஆண்டு, கார்த்தியின் நடிப்பில் வெளியான படம் 'சர்தார்'. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி. இந்த படத்தின் வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதலில் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், தற்போது அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சாம் சி.எஸ் பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கிய கதாபாத்திரங்களில் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக வீடியோ வெளியாகி வைரலானது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று காலை வரை மைசூரில் நடைபெற்றதாகவும் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் பாடல் காட்சி உட்பட ஒரு சில காட்சிகள் பேங்காக் மற்றும் சென்னையில் படமாக்கப்பட உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என பல தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.