காரில் முந்திச் செல்ல முயன்ற மத போதகர் மீது தாக்குதல் அதிமுக மாஜி அமைச்சர் வேலுமணி மீது வழக்கு

1 month ago 5

ஸ்பிக்நகர்: தூத்துக்குடியில் காரில் முந்திச் செல்ல முயன்ற விவகாரத்தில் மடத்துவிளை சேகர குருவை அதிமுகவினர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் இருவர் உள்பட 17 பேர் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தில் ஆறுமுகநேரி அடுத்த மடத்துவிளை சிஎஸ்ஐ சேகரத்தில் குருவானவராக பணிபுரிந்து வருபவர் ஜெகன்(35). இவர் தனது வாகனத்தில் தூத்துக்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ மற்றும் முன்னாள் எம்எல்ஏ மோகன் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்களின் கார்கள் வந்து கொண்டிருந்தது.

தூத்துக்குடி அருகே திருச்செந்தூர் சாலையில் உப்பாற்று ஓடை ரவுண்டானா அருகே வந்தபோது குருவானவரின் வாகனத்தை அதிமுகவினர் முந்திச் செல்ல முயன்றனர். ஆனால் முந்துவதற்கு போதுமான இடமில்லாததால் முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர். சிறிது தூரத்தில் குருவானவர் ஜெகனின் வாகனத்தை ஒதுக்கி நிறுத்திய அவர்கள், அவரை காரில் இருந்து இறங்கச் சொல்லி சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த குருவானவர் ஜெகன், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அப்போது சேகர குரு ஜெகன், நிருபர்களிடம் கூறுகையில், முள்ளக்காடு அருகே வேகமாக வந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கார்கள், எனது வாகனத்தை முந்திச் செல்ல முயன்று சென்டர் மீடியனில் ஒதுக்கி விட பார்த்தனர். நான் பிரேக் அடித்த பின்னால் வர முயலும்போது பின்னால் தொடர்ந்து வாகனங்கள் வந்ததால் நிறுத்த முடியவில்லை. தொடர்ந்து இவ்வாறு 4 கிலோ மீட்டர் தூரம் வந்தனர். முத்தையாபுரம் அடுத்த உப்பாற்று ஓடை பகுதியில் வந்தபோது எனது வாகனத்தை மறித்து நிறுத்தினர்.

அப்போது முன்னாள் அமைச்சர்கள், ‘எங்கள் வாகனத்தை முந்த பார்க்கிறாயா’ என்று கூறி தனது ஆதரவாளர்களை தாக்குமாறு தெரிவித்தனர். அவரது ஆதரவாளர்கள் 15 பேர் தாக்கியதில் எனக்கு காயம் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர்களிடம் நான் அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளதாக கூறினேன். ஆனாலும் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் என்னை தாக்கினர். வாகனத்தின் சாவியையும் பிடுங்கி எறிந்து விட்டனர் என்றார்.

இச்சம்பவம் குறித்து சேகர குரு ஜெகன், முத்தையாபுரம் போலீசில் புகார் அளித்தார். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜூ மற்றும் நேரில் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய 15 பேர் மீது இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவத்தை அறிந்து அமைச்சர் கீதாஜீவன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேகர குரு ஜெகனை நேரில் பார்த்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். இதனிடையே அதிமுகவினரால் குருவானவர் தாக்கப்பட்டது குறித்து கேள்விப்பட்ட தூத்துக்குடி நாசரேத் திருமண்டல குருவானவர்கள் மற்றும் சபை மக்கள், உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். சேகர குருவானவர் அதிமுகவினரால் தாக்கப்பட்ட சம்பவம், தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post காரில் முந்திச் செல்ல முயன்ற மத போதகர் மீது தாக்குதல் அதிமுக மாஜி அமைச்சர் வேலுமணி மீது வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article