டெல்லி: சிந்து நதி நீர் நிறுத்தம் முதல் சர்வதேச நிதியை பெறுவதில் முட்டுக்கட்டை ஏற்படுத்தும் வகையில் பாகிஸ்தான் மீது இந்தியாவின் புவிசார், பொருளாதார தாக்குதல் நடத்தி வருவதால் அந்நாடு பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. பஹல்காம் தாக்குதலில் ராணுவ நடவடிக்கைக்கு பதில் மாற்று வியூகத்தை இந்தியா வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஆதரவு அளித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக புவிசார் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் தலைவர்கள் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவித்தாலும், இந்தியா தரப்பில் அந்நாட்டின் மீது பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தும் வேலைகளை இந்தியா முடுக்கியுள்ளதால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 1960ம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியுள்ளது. இது பாகிஸ்தானின் விவசாயத்திற்கு (80% நீர்ப்பாசனம்) மற்றும் மின்சார உற்பத்திக்கு (மூன்றில் ஒரு பங்கு) பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அட்டாரி – வாகா எல்லையை மூடியதால், பொருளாதார உறவு பாதித்துள்ளது. பாகிஸ்தானுடனான தூதரக ரீதியிலான உறவுகளை குறைத்துக் கொண்டது மட்டுமின்றி விசா விலக்கு திட்டத்தை இந்தியா ரத்து செய்துள்ளது. பாகிஸ்தான் தனது மருந்து மூலப்பொருட்களில் 30 முதல் 40 சதவீதத்தை இந்தியாவை நம்பியுள்ளது. இந்த ஏற்றுமதியை கட்டுப்படுத்தியதால் பாகிஸ்தான் மருத்துவத் துறை பெரும் பாதிப்பை சந்திக்கும். சிந்து நதிநீர் ஒப்பந்த நிறுத்தத்தை ‘போர் நடவடிக்கை’ என்று விமர்சித்த பாகிஸ்தான், இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடியுள்ளது.
மேலும், இந்தியாவின் குற்றச்சாட்டுகளை மறுத்து, பஹல்காம் தாக்குதலில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று வாதிடுகிறது. எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள், இரு நாடுகளையும் பதற்றத்தை தணிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளன. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு மேலும் பொருளாதாரம் சார்ந்த நெருக்கடியை கொடுக்கும் வகையில், சர்வதேச நிதி நிறுவனங்களான ஐஎம்எப், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றிலிருந்து பாகிஸ்தானுக்கு கிடைக்கும் நிதி உதவிகளை மறு ஆய்வு செய்யுமாறு இந்தியா வலியுறுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை பாகிஸ்தானின் பலவீனமான பொருளாதாரத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் சர்வதேச நிதியத்திடம் இருந்து பாகிஸ்தான் 7 பில்லியன் டாலர் பிணையுதவி திட்டத்தைப் பெற்றது.
மேலும் கடந்த மார்ச் மாதம் 1.3 பில்லியன் டாலர் பருவநிலை பாதுகாப்பு கடனைப் பெற்றது. வரும் மே 9ம் தேதி சர்வதேச நிதி நிறுவனத்தின் நிர்வாகக் குழு, பாகிஸ்தான் அதிகாரிகளுடன் இந்த நிதி உதவியின் முதல் மறு ஆய்வு கூட்டத்தை நடத்த உள்ளது. இந்தக் கூட்டத்தில், பாகிஸ்தானின் நிதி உதவியை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தீவிரவாதத்திற்கு எதிரான கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்த உள்ளது. தீவிரவாத நிதியுதவி மற்றும் பணமோசடி தடுப்பு அமைப்பான Financial Action Task Force (FATF), பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே’ (சாம்பல்) பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோர இந்தியா திட்டமிட்டுள்ளது. இது பாகிஸ்தானின் சர்வதேச கடன் பெறும் திறனை மேலும் கட்டுப்படுத்தும். உலக வங்கி கடந்த ஜனவரியில் பாகிஸ்தானுக்கு 20 பில்லியன் டாலர் கடன் தொகுப்பை அங்கீகரித்தது.
மேலும் ஆசிய வளர்ச்சி வங்கி கடந்தாண்டு இறுதி வரை 43.4 பில்லியன் டாலர் மதிப்பிலான 764 கடன்கள், மானியங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ளது. இந்த நிதி உதவிகளை மறு ஆய்வு செய்யுமாறு இந்தியா இந்த வங்கி நிறுவனங்களை வலியுறுத்த உள்ளது. பாகிஸ்தானின் பொருளாதாரம் ஏற்கனவே நெருக்கடியில் உள்ளது. 305 பில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), 70% கடன் – விகிதம், 10.5 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி இருப்பு ஆகியவற்றுடன் உள்ளது. சர்வதேச நிதி உதவி தடைபட்டால், அந்நாடு கடுமையான பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும். இந்தியாவின் தொடர் நடவடிக்கைகள் மற்றும் புவிசார் பதற்றங்கள் காரணமாக பாகிஸ்தானின் பங்குச்சந்தை கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. அதாவது பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர், குறிப்பாக கடந்த 10 நாட்களில் பாகிஸ்தானின் பங்குச்சந்தை 7,000 புள்ளிகள் சரிந்ததாகவும், இதற்கு இந்தியாவின் பதிலடி நடவடிக்கைகள் காரணம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 24ம் ேததி கராச்சி பங்குச்சந்தையின் கேஎஸ்இ-100 குறியீடு 2,500 புள்ளிகளுக்கு மேல் (2% சரிவு) குறைந்தது. முடிவாக இந்தியாவின் நிதி மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள், பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேலும் பலவீனப்படுத்தி, அதன் சர்வதேச நிதி ஆதாரங்களை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் பாகிஸ்தானின் விவசாயம், மருத்துவம், மொத்த பொருளாதாரத்திற்கு நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தலாம். இருப்பினும், இந்த நடவடிக்கைகள் இந்தியா, பாகிஸ்தானில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் உள்ளது. கடந்த 10 நாட்களில் பாகிஸ்தானின் பங்குச்சந்தை 7,000 புள்ளிகள் சரிந்ததாகவும், இதற்கு இந்தியாவின் பதிலடி நடவடிக்கைகள் காரணம் என்றும் கூறப்படுகிறது.
The post சிந்து நதி நீர் நிறுத்தம் முதல் சர்வதேச நிதியை பெறுவதில் முட்டுக்கட்டை; பாகிஸ்தான் மீது இந்தியா மறைமுக பொருளாதார தாக்குதல்: ராணுவ நடவடிக்கைக்கு பதில் மாற்று வியூகத்தின் மூலம் நெருக்கடி appeared first on Dinakaran.