
ஆக்கரா,
பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதற்காக அவர் தனி விமானத்தில் நேற்று கானாவுக்கு புறப்பட்டு சென்றார்.
கானா நாட்டின் ஜனாதிபதி ஜான் திராமணி மகாமா அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி விமான நிலையத்தில் சென்றிறங்கியதும் அவருக்கு, அந்நாட்டு முறைப்படி சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அவரை ஜனாதிபதி மகாமா சிறப்பான முறையில் வரவேற்றார். இதனை தொடர்ந்து பிரதமருக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
இந்த பயணத்தில், வரலாற்று தன்மை கொண்ட உறவுகளை ஆழப்படுத்தும் நோக்கில் இரு தலைவர்களும் தங்களுடைய பார்வைகளை பரிமாறி கொள்வார்கள். முதலீடு, எரிசக்தி, சுகாதாரம், பாதுகாப்பு, திறன் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய விசயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கானா நாட்டுக்கான பயணம் முடிந்து, டிரினிடாட் அண்டு டுபாகோ நாட்டுக்கு பிரதமர் மோடி இன்று மாலை புறப்பட்டார். அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், டிரினிடாட் அண்டு டுபாகோ நாட்டுக்கு புறப்பட்டு செல்கிறேன். இன்று மாலை, போர்ட் ஆப் ஸ்பெயினில் சமூக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் உள்ளேன். நாளை டிரினிடாட் அண்டு டுபாகோ நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவேன்.
அந்நாட்டுடன் நாம் மிக பழமையான கலாசார தொடர்புகளை கொண்டிருக்கிறோம். மதிப்புமிக்க நட்பு நாட்டுடனான உறவை ஆழப்படுத்துவதற்கான ஆலோசனையை எதிர்நோக்கி இருக்கிறேன் என அவர் பகிர்ந்து உள்ளார்.