சென்னை: கானத்தூர் முதல் மாமல்லபுரம் வரையிலான, ‘சைக்ளோத்தான் 2024’ போட்டியில் 1300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று அசத்தினர். இந்திய சைக்கிள் கூட்டமைப்பு உதவியுடன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், எச்சிஎல் தனியார் நிறுவனத்துடன் இணைந்து ‘சைக்ளோத்தான் 2024’ போட்டியை இசிஆர் சாலையில் நடத்த திட்டமிட்டது. அந்த வகையில், ‘சைக்ளோத்தான்’ போட்டி கானத்தூர் மாயாஜால் திரையரங்கம் அருகே நேற்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. இதில், வீரர், வீராங்கனைகள் ஆர்வமாக சைக்கிளை மிதித்துக்கொண்டு கோவளம், நெம்மேலி, பட்டிப்புலம் இசிஆர் சாலை வழியாக மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரிக்கு அருகே வந்து அங்குள்ள வளைவில் திரும்பி மீண்டும் மாயாஜால் திரையரங்கம் அருகே போட்டி நிறைவு பெற்றது.
இதில், 18-35 வயது வரை தொழில் முறை வீரர்கள் 55 கிமீ வரையும், 18-35 வயது வரை அமெச்சூர் போட்டி 55 கிமீ வரையும், மாஸ்டர்ஸ் 35 வயதுக்கு மேற்பட்டோர் 24 கிமீ வரையும், கிரீன் ரைடு 16 வயதுக்கு மேற்பட்டோர் 15 கிமீ வரை என 4 பிரிவுகளாக பிரிந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர். முன்னதாக, சைக்ளோத்தான் போட்டியை முன்னிட்டு மாயாஜால் திரையரங்கம் முதல் மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வரை இசிஆர் சாலையில் அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, அதற்கு மாறாக பூஞ்சேரி ஓஎம்ஆர் சாலை-அக்கரை இணைப்பு சாலையினை வாகனங்கள் செல்ல பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. போட்டியையொட்டி, இசிஆர் சாலையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post கானத்தூர் முதல் மாமல்லபுரம் வரை இசிஆரில் சைக்ளோத்தான் போட்டி: 1300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு appeared first on Dinakaran.